தந்தை பெரியார் இல்லையென்றால் நாமெல்லோரும் இல்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சியை மக்கள் பாராட்டுகின்றனர் என விழுப்புரத்தில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேச்சு.

விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் ஒழிந்தியாம்பட்டுவில் ரூ.42.69 கோடிக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். ரூ.42.69 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 10,722 பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார். இதையடுத்து ரூ.24 கோடியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும், அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் முதலமைச்சர் தொடக்கி வைத்தார்.

இதன்பின் பேசிய முதல்வர், திமுக ஆட்சியில் நிம்மதியாக உள்ளதாக மக்கள் பாராட்டி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி இருண்ட ஆட்சி என்பதற்கு சமத்துவபுரம் கிடப்பில் போடப்பட்டதே சாட்சி. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எந்த குறையும் இல்லை என்று மக்கள் கூறுகின்றனர். தந்தை பெரியார் இல்லையென்றால் நாமெல்லோரும் இல்லை, தமிழகத்தின் முன்னேற்றமும் இல்லை. சாதி என்ற அழுக்கை சுமந்து வந்த சமூகத்துக்கு பகுத்தறிவு ஓடியது திராவிட இயக்கம் என கூறினார்.

பெரியார், அண்ணா, கருணாநிதியால் தமிழருக்கு எதிரான சூழ்ச்சிகள் எடுபடாமல் போனது. பெரியார் கண்ட கனவுப்படி தமிழகம் எங்கும் சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அனைத்து சமூகத்தினரும் வசிக்க கூடிய முதல் சமத்துவபுரம் தமிழகத்தில் 1997ல் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சிக்கான ஒரு உதாரணமே சமத்துவபுரங்கள் ஆகும். வலுவான கிராமங்களை உருவாக்கினால் மட்டுமே வலுவான இந்தியாவை கட்டமைக்க முடியும் என்றும் தமிழ்நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்