தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? விளக்கும் அமைச்சர்!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர்களிடம் ஆலோசித்த பின் முடிவு எடுக்கப்படும் என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நாள் ஒன்றுக்கு 6,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக, சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டுள்ளது. மேலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தாமல், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார்.

இந்தநிலையில் ஈரோடு மாவட்டம், நம்பியூரில் 2 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையயன் திறந்து வைத்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து 18 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது எனவும், அவர்கள் பள்ளி திறப்பது, வழிகாட்டுதல் தொடர்பாக அறிக்கையை தயார் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், முதல்வர்களிடம் ஆலோசித்த பின் முடிவு எடுக்கப்படும் எனவும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல், அடுத்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.