காவேரி டெல்டா பாசனத்திற்கான ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் – முதல்வர் அறிவிப்பு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வரும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

காவிரி டெல்டாவின் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உட்பட 12 மாவட்டங்கள் 16 லட்சத்திற்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதிக்காக மேட்டூர் அணையையே நம்பி உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ம் தேதி  தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஜூன் மாதம் 90 அடியாக இருக்கும்போது பருவமழை நன்றாக பொழிய சூழ்நிலை இருந்தால் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும். நேற்று அணையின் நீர்மட்டம் 97.22 அடியாக இருந்தது. இந்நிலையில், மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வரும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறந்து விடுவது குறித்து முதலமைச்சர்  முன்னதாக இம்மாதம் நீர்வளத் துறை அமைச்சர், வேளாண்மை மற்றும் விவசாயிகள் துறை அமைச்சர், வோளாண்மைத் துறை செயலாளர் ஆகியோருடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்கள்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அணையின் தற்போதைய நீர் மட்டம், டெல்டா பாசன விவசாயிகளின் தேவை ஆகியவற்றைக் குறித்து விவாதிக்கப்பட்டு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது குறித்து அறிவிப்பினை முதலமைச்சர் வெளியிட்டார்கள்.

மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு, 3-6-2021 அன்று நிலவரப்படி 97.13 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 61.43 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. நடப்பாண்டு (2021-2022) தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாலும், காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் தேதி முதல்  பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan