இப்படி பந்துபோட விராட் கோலி கிட்ட கொடுத்திருக்கலாம்! ஆர்சிபி வீரர்களை விமர்சித்த கிருஷ் ஸ்ரீகாந்த்!

ஐபிஎல் 2024 : பெங்களூரு அணி பந்துவீச்சு மிகவும் மோசமாக இருக்கிறது எனவும் பேசாமல் விராட் கோலி கிட்ட பந்தை கொடுக்கலாம் எனவும் கிருஷ் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பெங்களூரு சின்ன சாமி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்து முதலில் ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி எந்த அளவுக்கு அதிரடியாக விளையாட முடியுமோ அதே அளவிற்கு அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்தது.

இதுவரை ஐபிஎல் சீசனில் அதிகம் ரன்கள் அடித்த அணி என்ற சாதனையையும் ஹைதராபாத் அணி படைத்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் பந்துவீச்சாளர்கள் எல்லாம் ரன்களை வாரி வழங்கினார்கள் என்று கூட கூறலாம். குறிப்பாக ஆர் டாப்லி 4 ஓவர்கள் பந்து வீசி 68 ரன்கள் கொடுத்தார். அதைபோல், விஜய்குமார் வைஷாக் 4 ஓவர்களில் 64 ரன்கள் கொடுத்தார். யாஷ் தயாள், லாக்கி பெர்குசன் ஆகியோரும் 4 ஓவர்கள் பந்துவீசி 50 ரன்களுக்கு மேல் கொடுத்தனர்.

ஏற்கனவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் பந்துவீச்சு பலமாக இல்லை என விமர்சனங்கள் எழுந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் அதிகம் ரன்கள் கொடுத்த காரணத்தால் இன்னுமே அவர்கள் மீது விமர்சனங்கள் அதிகமாகி இருக்கிறது. அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ் ஸ்ரீகாந்த் இப்படி பந்துபோட விராட் கோலி கிட்ட கொடுத்திருக்கலாம் என பெங்களூர் அணியின் பந்துவீச்சாளர்களை விமர்சித்து பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய கிருஷ் ஸ்ரீகாந்த் ” பெங்களூர் அணியின் பந்துவீச்சு பார்ப்பதற்கு மிகவும் மோசமாக இருக்கிறது. ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர் டாப்லி பந்து வீச வந்த போது, அவருடைய பந்தையும் ஹைதராபாத் வீரர்கள் எங்கயோ பறக்க விட்டார்கள். அவரை போல, லாக்கி பெர்குசன் பந்துகளையும் அடித்து நொறுக்கினார்கள். என்னை பொறுத்தவரை லாக்கி பெர்குசன் சிறப்பான பந்துவீச்சாளர் இல்லை.

பெங்களூர் அணியில் சிறந்த பந்துவீச்சாளர் என்றால் வில் ஜாக்ஸ் மட்டும் தான் என்று நான் கூறுவேன். இப்போது பெங்களூர் அணியில் 11 பேட்டர்கள் விளையாடுகிறார்கள். அதில் ஃபாஃப் டு பிளெசிஸை 2 ஓவர்கள் பந்து வீசச் சொல்லுங்கள். கேமரூன் கிரீனுக்கு 4 ஒவர்களைக் கொடுங்கள். விராட் கோலிக்கு 4 ஓவர்கள் கொடுங்கள். நிச்சியமாக விராட் கோலி பந்து வீசி இருந்தால் கூட இந்த அளவிற்கு ரன்கள் வந்து இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை.

ஏனென்றால், விராட் கோலி நல்ல ஒரு சிறந்த பந்துவீச்சாளர். ஒரு கட்டத்தில் ஹைதராபாத் அணி வீரர்கள் பெங்களூர் வீரர்களின் பந்துவீச்சாளர்கள் பந்துகளை பறக்கவிட்ட போது விராட் கோலி ரொம்பவே நொந்துபோனார். அப்போது அவருடைய மன நிலை பேசாமல் நாமளே பந்துவீசிடலாம் என்று தான் தோணியிருக்கும்” எனவும் கிருஷ் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும், நேற்று நடைபெற்ற போட்டியில் 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. இறுதி வரை போராடிய நிலையில், 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.