50 லட்சம் பெண்களுடன் வெற்றிகரமாக நடைபெற்ற வனிதா மதில்’ …! ‘வனிதா மதில்’ ஏன் இந்த பெயர்?

சபரிமலைக்கு அனைத்து பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் தீர்ப்புக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் உச்ச தீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த இயலாத நிலையில் கேரள அரசு உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் இளம்பெண்களை அனுமதிக்க வலியுறுத்தியும், வழிபாட்டில் சீர்த்திருத்தங்களை மக்கள் ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், கேரளாவில் மகளிர் மனித சுவர் அதாவது  ‘வனிதா மதில்’ போராட்டம் நடத்தப்பட்டது.அது குறித்து ஒரு  தொகுப்பை பார்ப்போம்…
மாற்றத்தை நோக்கி:
ஒரு அரசின் முடிவுக்கு கட்டுப்பட்டாலும் சில நேரங்களில்  கொள்கைகளுக்கு கட்டுப்படமாட்டார்கள். இத்தகைய சூழலில் கேரள இடது முண்ணனி அரசின்  அழைப்பை ஏற்று, பழமை வாதத்தை ஒழிக்க ஐம்பது இலட்சம் பெண்கள் புத்தாண்டு தினத்தன்று பிரம்மாண்டமான மதில் அமைத்திருப்பது சாதாரணமல்ல.
பெண்களை பின்னோக்கி இழுக்க முயற்சிக்கும் அனைத்து மதவாத பிற்போக்கு சக்திகளுக்கும் ஒரு எச்சரிக்கை ஒலியாக ஓங்கி அடித்திருக்கிறார்கள் இந்த ‘வனிதா மதில்’ மூலமாக.
‘வனிதா மதில்’ ஏன் இந்த பெயர்:
“வனிதா” என்றால் மலையாள மொழியில் “பெண்”என்று அர்த்தம்.பெண்களால் கட்டப்பட்ட சுவர் பெரும் சுவராக மாறி கின்னஸ் சாதனையிலும் இடம் பெறப்போகும் வாய்ப்பை பெற்றுள்ளது.
சுமார் 620 கீ.மீ மனித சுவர் கேரளமாநிலத்தின் 14 மாவட்டங்களை உள்ளடக்கி வடக்கில் காசர்கோட்டில் துவங்கி தெற்கே திருவனந்தபுரத்தில்  நிறைவடைந்துள்ளது.174 பெண்கள் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.அமைப்புகளில் இல்லாத மக்களும் சாதி பேதம், படிப்பு, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக்கடந்து பெண்கள் மற்றும சிறுமிகளும் பங்கேற்றுள்ளனர். மதவாத இயக்கங்களுக்கு எதிராக எழுந்த மாபெரும் சுவர்.. மதவாத பாஜகவின் ஆதரவு இயக்கமான நாராயணகுருதர்ம பரிபாலன அமைப்பும் இவர்களோடு கைகோர்த்தது இன்னும் சிறப்பு.
இந்த மனித சுவரின் மேல் பாஜக ,ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட மதவாத இயக்கங்கள் குண்டுகளை வீசி சிதைக்க முயற்சித்தும் மாபெரும் மதில் புத்தாண்டில் எழுப்பியுள்ளனர் நமது பெண்கள்.
வரலாற்றில் பெண்களுக்கு எதிராக நடந்த கசப்பான சம்பவங்கள்:
மன்னன் மார்புக்கு வரி விதித்த போது, அதை எதிர்த்து தன் மார்பை  அறுத்து உயிரை மாய்த்துக்கொண்ட நங்கேலி, பந்தலப்பெண் ஒருத்தி மூக்குத்தி அணிந்ததற்காக மூக்குத்தி அறுத்தெறியப்பட்ட சம்பவம், 1915ல் திருவனந்தபுரம்,உயிரோட்டம்பலம் கிராமத்தில் புலையர் இனப்பெண் பஞ்சமி தன் கல்விக்காக போராடி பள்ளிக்கு சென்றபோது அவள் வகுப்போடு சேர்த்து எரிக்கப்பட்ட சம்பவம் இப்படி இன்னும் ஆசிகா என்ற சிறுமி முதல் சுவாதி என்ற பெண் ஏராளம் நம் இந்திய தேசத்தினுள் பெண்களுக்கு எதிராக நட்ந்து கொண்டுதான் இருக்கிறது இனிமேலும் நடக்கக்கூடாது, அப்படி நடக்க வாய்ப்பு ஏற்படும்பட்சத்தில் அதற்கு பெண்கள் நாங்கள் பலிகடா அல்ல என்று உரக்க சொல்லியிருக்கிறது இந்த “வனிதா மதில்”….
மாலை 3.45 கூடிய வனிதா மதிலை கேரள இடது ஜனநாயக முண்ணனி அரசின் முதல்வர். பினராயி விஜயன் தொடங்க 4.30 மணிக்கு பழமை வாதத்தை ஒழிப்போம். சமவாய்ப்பு, மறுமலர்ச்சியைப்பாதுகாப்போம் என்ற மூன்று மகத்தான உறுதிமொழிகளோடு நிறைவு பெற்றிருக்கிறது.இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக சென்னை முகப்பேரிலும் வெளி மாநிலங்களிலும்,பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் மனித சுவர்கள் எழுந்தன… புத்தாண்டில் பெண்களை அடக்குமுறையிலிருந்து கட்டவிழ்த்த ஆண்டாக பிறந்து அவர்களின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டிருக்கிறது “வனிதா மதில்”….

Leave a Comment