கடலில் விழுந்த அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டர் – 5 பேர் மாயம்!!

அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில், 5 பேர் மாயமாகியுள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சாண்டியாகோ நகருக்கு அருகே உள்ள பசுபிக் பெருங்கடலில் அமெரிக்க போர்க்கப்பல் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை நேரத்தில் இந்தப் கப்பலில் இருந்து அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான எம்.எச்.60 எஸ் ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றுள்ளது. இதில் விமானி உட்பட கடற்படை வீரர்கள் 6 பேர் இருந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த ஹெலிகாப்டர் கிளம்பிய சிறிது நேரத்துக்குப் பின்பதாக கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாகவும், ரேடார் பார்வையிலிருந்தும் இந்த ஹெலிகாப்டர் மறைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணிகள் தொடங்கியுள்ளது. மேலும் கடற்படைக்கு சொந்தமான ஏராளமான விமானங்கள் மற்றும் கப்பல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டது.

ஆனால் இந்த மாயமான கடற்படை ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பசிபிக் பெருங்கடலில் விழுந்து நொறுங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மீட்புக் குழுவினர் மற்றும் கடலோர காவல்படையினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். அப்பொழுது விமானத்தில் பயணம் செய்த ஒரே ஒரு கடற்படை வீரர் மட்டும் நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்ட காவல்படையினர் ஹெலிகாப்டர் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் 5 பேர் தற்போது வரை காணவில்லை என கூறப்பட்டுள்ளது. இவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கக்கூடும் எனவும் நம்பப்படுகிறது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், மாயமான கடற்படை வீரர்கள் குறித்தும் தொடர்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருகிறது.

author avatar
Rebekal