சிறப்பு எஃகு உற்பத்தி ஊக்குவிப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ரூ.6,322 கோடி ஒப்புதல்…!

சிறப்பு எஃகு உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ரூ.6,322 கோடி ஒப்புதல் வழங்கியுள்ளது.

நாடாளுமன்றத்தின் மழைகால கூட்டுத்தொடர் தற்போது நடைபெறுகிறது. அத்தகைய சூழ்நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் நடுவில் நடந்துள்ளது. வழக்கமாக அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெறும். ஆனால், பக்ரீத் விடுமுறை காரணமாக, இந்த கூட்டம் இன்று நடைபெற்றது.

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், சிறப்பு எஃகு இரும்பு தொழில்களுக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை ஐந்தாண்டுகளுக்கு வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ரூ.6,322 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியா பல்வேறு வகையான எஃகு வகைகளை உற்பத்தி செய்கிறது. ஆனால் சிறப்பு எஃகு விஷயத்தில் பின்னால் இருக்கிறோம். சிறப்பு எஃகு தேவைகளைப் பூர்த்தி செய்ய இறக்குமதியைச் சார்ந்து இருக்க வேண்டியிருக்கிறது. உலகின் இரண்டாவது பெரிய கச்சா எஃகு உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. ஆனால் சிறப்பு எஃகு விஷயத்தில் இறக்குமதி செய்கிறோம் என்று அனுராக் தாக்கூர் கூறினார்.

இறக்குமதியைக் குறைப்பதற்காக உள்நாட்டு மட்டத்தில் திறனை அதிகரிக்க ரூ. 6322 கோடி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது நாட்டில் புதியதாக 5.25 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என கூறினார்.

author avatar
murugan