மியான்மரில் தாக்குதல் நடத்தும் இராணுவத்துக்கு ஐநா எச்சரிக்கை!

மியான்மரில் உள்ள மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரக்கூடிய ராணுவத்தினருக்கு ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி வெற்றிபெற்றது. இந்த தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி ஆங் சான் சூகியின் புதிய அரசை ஏற்க மறுத்த மியான்மர் ராணுவம், ஆங் சான் சூகி தலைமையிலான கட்சியின் ஆட்சியை கவிழ்த்து ராணுவஆட்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆங் சான் சூகி மற்றும் மியான்மரில் உள்ள முக்கிய தலைவர்கள் பலர் ஒரே நாள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து அந்நாட்டு ராணுவம் அவசர நிலையை பிரகடனப்படுத்தி ராணுவ ஆட்சியை நடத்தி வருகிறது.

இந்நிலையில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மர் உள்ள மக்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போராட்டத்தை அடக்கும் விதமாக அந்நாட்டு ராணுவம் துப்பாக்கிச்சூடு மற்றும் கண்ணீர் புகை குண்டு ஆகியவற்றை பயன்படுத்துகிறது. இந்த ராணுவத்தினரின் தாக்குதலில் 800-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்பொழுதும் இது குறித்து ஐக்கிய நாடுகள் சபை மியான்மர் ராணுவத்திற்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், மியான்மர் ராணுவ ஆட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாகவும், கயா மாகாணத்தில் மக்கள் நோயாலும் பசியாலும் உயிரிழந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மியான்மர் ராணுவ நடவடிக்கையால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கயா மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாகவும், இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள மக்கள் காடுகளில் தஞ்சம் புகுந்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, அங்குள்ள மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும், சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தக்கூடிய மியான்மர் ராணுவத்திற்கு சர்வதேச சமூகம் அளித்து வரக்கடிய உதவிகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஐநா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

author avatar
Rebekal