நெருக்கடியில் சென்னை: “அடுத்த போட்டியிலும் இவர்கள் இல்லை”- பயிற்சியாளர் பிளமிங்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் இங்கிடி, ஜேசன் பெஹ்ரெண்டோர்ப் அடுத்த போட்டியிலும் கலந்துகொள்ளமாட்டார்கள் என்று அணியின் பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. சென்னை அணியின் தோல்விக்கு பந்துவீச்சுதான் முக்கிய காரணம் என்று விமர்சனங்கள் எழுந்து வந்தது. மேலும் அடுத்த போட்டி, பஞ்சாப் அணியுடன் வரும் 16-ம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது.

சென்னை அணியின் கடந்த போட்டியில் ஷர்துல் தாகூர், பிராவோ, சாம் கரண், தீபக் சாஹர் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாடினார்கள். இதில் யாரும் 140 கி.மீ-க்கு மேல் வேகமாக பந்துவீசுபவர்கள் இல்லை என்றும், அடிக்கடி பவுன்சர் வீசக்கூடியவர்ளும் இல்லை என்றும், சிறப்பாக பவுன்சர் மற்றும் 140 கி.மீ-க்கு மேல் வேகமாக பந்துவீச்சாளர்களை களமிறக்கவேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஹசில்வுட் திடீரென விலகியதால் சென்னை அணிக்கு இதுபோன்ற சிக்கல் ஏற்பட்டது. மேலும், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த லுங்கி நிகிடி மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேசன் பெரேண்டர்ப் சென்னை அணியில் இருக்கும் நிலையில், அவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்ததால், தனிமையில் உள்ளனர். இதன்காரணமாக பஞ்சாப் அணிக்கேதிரான போட்டியில் இருவரும் பங்கேற்கமாட்டார்கள் என்று சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.