இன்று முதல் இந்தியாவில் டொயோட்டா யாரிஸ் நிறுத்தம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

இந்தியாவில் இன்று முதல் டொயோட்டா யாரிஸ் நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் இந்திய சந்தையில் இருந்து டொயோட்டா யாரிஸை அதிகாரப்பூர்வமாக நிறுத்தியுள்ளது.யாரிஸ் தயாரிப்பு நிறுத்தப்படுவது பற்றிய செய்திகள் நீண்ட காலமாக கூறப்பட்டு வந்தன.அந்த வகையில், இன்று முதல் இந்தியாவில் டொயோட்டா யாரிஸ் நிறுத்தப்பட்டதாக,டோயோட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

குறிப்பாக,நடுத்தர அளவிலான செடான் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, மாருதி சுசுகி சியாஸ், ஸ்கோடா ரேபிட் மற்றும் வோக்ஸ்வாகன் வென்டோ போன்றவற்றுக்கு டொயோட்டா யாரிஸ் போட்டியாக இருந்தது.

இந்த நிலையில்,இந்திய சந்தையில் இருந்து டொயோட்டா யாரிஸ் நிறுத்தப்பட்டுள்ளது.எனினும்,யாரிஸின் உரிமையாளர்களுக்கு குறைந்தபட்சம் 10 வருட உதிரி பாகங்கள் கிடைக்க ஆதரவளிப்பதாக நிறுவனம் உறுதியளிக்கிறது.அதே வேளையில், நாடு முழுவதும் உள்ள தனது டீலர் சேவை நிலையங்கள் மூலம் அனைத்து யாரிஸ் வாடிக்கையாளர்களின் தேவைகளையும் தொடர்ந்து பூர்த்தி செய்வதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து,இனி நிறுவனத்தின் தயாரிப்பு வரிசையில் டொயோட்டா கிளான்சா, அர்பன் க்ரூஸர், இன்னோவா கிரிஸ்டா, ஃபார்ச்சூனர், கேம்ரி மற்றும் டொயோட்டா வெல்ஃபயர் போன்றவை இருக்கும் என தெரிகிறது.