இது என்னுடைய கடைசி போராட்டமாக இருக்கும்! ஜனவரி-30ல் போராட்டத்தில் ஈடுபடவுள்ள அண்ணா ஹசாரே…!

எனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எனது உண்ணாவிரத போராட்டத்தை மீண்டும் தொடங்குவேன். இது எனது கடைசி போராட்டமாக இருக்கும்.

தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து, இரண்டு மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பதாக டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதில் பெரிய அளவில் கலவரங்கள் வெடித்ததில் காவல்துறையினர் காயமடைந்தனர். மேலும் இதில் ஒரு விவசாயி உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து, அண்ணா ஹசாரே மகாராஷ்டிராவின் அகமதுநகரில் உள்ள ரலேகன் சித்தியில் விவசாயிகள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக ஜனவரி 30 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ஜனவரி 30-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், தனது ஆதரவாளர்கள் அந்தந்த இடங்களில் எதிர்ப்பு தெரிவிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். மேலும் விவசாயிகள் தொடர்பான தனது கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றத் தவறினால், அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட போவதாகவும், இது தனது கடைசி எதிர்ப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசாங்கம் வெற்று வாக்குறுதிகள் மட்டுமே தருகிறது. இதன் காரணமாக எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. எனது கோரிக்கைகளுக்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று பார்ப்போம்.  அவர்கள் ஒரு மாதத்திற்கு நேரம் கோரியுள்ளனர், எனவே ஜனவரி இறுதி வரை அவர்களுக்கு நேரம் கொடுத்துள்ளேன். எனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எனது உண்ணாவிரத போராட்டத்தை மீண்டும் தொடங்குவேன். இது எனது கடைசி போராட்டமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.