நெட்பிளிக்ஸில் வேலை பெற முயன்ற பெண்..! ரூ.3.47 லட்சத்தை இழந்த துயரம்..!

நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் வேலை பெற முயன்ற பெண் ஒருவர் ரூ.3.47 லட்சத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மிஹிகா கியானி என்ற பெண்ணிடம் அடையாளம் தெரியாத இருவர் ரூ.3.47 லட்சத்தை மோசடி செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைனில் வேலை தேடிக் கொண்டிருந்த மிஹிகா கியானி, நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறிய ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை பார்த்துள்ளார்.

பின்னர், அதில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டதில், அதற்கு பதில் அளித்த நபர் ஒருவர் தன்னை நிறுவனத்தின் எக்ஸிகியூட்டிவ் எச்ஆர் தருண் தனேஜா என்று அறிமுகப்படுத்தியுள்ளார். பின்னர் அந்த பெண்ணிற்கு ஒரு நாளைக்கு ரூ.4,500 சம்பளம் தருவதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து, அவரிடம் நிறுவனத்தில் வேலை செய்வதற்கான உரிமம் பெறுவதற்கு ரூ.849 செலுத்த வேண்டும் என்று கேட்ட நிலையில் கியானி அந்தத் தொகையை செலுத்தியுள்ளார். தருண் தனேஜா, ஜதின் பாட்டியா என்பவரை கியானிக்கு அறிமுகப்படுத்தி, இவர் உங்களை வழிநடத்துவார் என்று கூறியுள்ளார்.

பாட்டியா பாதுகாப்பு நடவடிக்கையாக ரூ.4,500 செலுத்த வேண்டும் என்றும், அந்தத் தொகை திருப்பித் தரப்படும் என்றும் கியானியிடம் கூறியுள்ளார். இதன்பின் பல்வேறு சாக்குப்போக்குகளைக் கூறி பணம் பெற்றுள்ளனர். ரூ.3.47 லட்சம் செலுத்திய பிறகும் ஒரு ரூபாய் கூட திரும்பப் பெறாததால் கியானி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

இதனையடுத்து, மிஹிகா கியானி அளித்த புகாரின் பேரில் மோசடி செய்த அடையாளம் தெரியாத இருவர் மீது, மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவின் கீழ் உள்ள சைபர் கிரைமில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.