பூத் சிலிப் வரவில்லையா.? வாக்குச்சாவடியை கண்டறிய எளிய வழி இதோ…

Election2024 :  இணையத்தின் வாயிலாக வாக்காளர்கள், தங்கள் பூத் விவரங்களை தெரிந்துகொள்ளும் வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகள் உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நாளை மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, வாக்குச்சாவடி தயார் செய்யும் வேலைகள், வாக்குசீட்டு (பூத் சிலிப்) விநியோகிக்கும் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் ஸ்லிப்பில் வாக்காளர் பெயர், வயது, முகவரி, தொகுதி, வாக்களிக்கும் இடம், அங்குள்ள வரிசை பிரிவு ஆகிய மொத்த விவரங்களும் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதனை அடையாள அட்டையாக கொண்டு செல்ல முடியாது. அதனுடன்அரசு அல்லது அனுமதிக்கப்பட்ட தனியார் அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும்.

ஒருவேளை, பூத் சிலிப் இன்னும் வழங்கவில்லை, எங்கு சென்று வாக்களிப்பது என்று தெரியவில்லை என்றாலும், அதனை எளிதில் தெரிந்து கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் ஒரு இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. electoralsearch.eci.gov.in எனும் இணையத்தளத்திற்குள் சென்று தெரிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது.

electoralsearch.eci.gov.in எனும் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று, அதில் 3 வகைகளில் வாக்காளர்கள் பூத் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். அதில் முதலில், வாக்காளர் அடையாள எண்ணை உள்ளீடு செய்தால், பூத் விவரங்கள் தெரியவரும். அல்லது, பெயர், பிறந்த தேதி/வயது, முகவரி, தொகுதி உள்ளிட்ட மற்ற விவரங்களை சரியாக கொடுத்தாலும் பூத் விவரங்கள் தெரியவரும். இறுதியாக வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை பதிவு செய்தாலும் பூத் விவரங்கள் தெரியவரும்.

பூத் ஸ்லிப் உடன் வாக்காளர் அடையாள அட்டை மட்டுமே கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலை இல்லை. அதற்கு பதிலாக,  ஆதார் அட்டை, பான் கார்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது தபால் நிலைய கணக்கு புத்தகம், சுகாதார காப்பீட்டு அட்டை,  ஓட்டுநர் உரிமம்,  RGI மூலம் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, எம்.பி, எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சிக்களுக்கான பென்சன் ஆவண அதிகாரப்பூர்வ அடையாள அட்டை, ஊரக வேலைவாய்ப்பு திட்ட வேலைக்கான அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளைகொண்டு செல்லலாம்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.