நாளை மறுநாள் ஜோ பைடன் பதவியேற்பு.. தமிழர்களின் பாரம்பரிய கோலங்களுக்கு இடம்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றதை தொடர்ந்து, வரும் 20 ஆம் தேதி பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்கவுள்ளனர். இதனையடுத்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் தமிழர்களின் பாரம்பரிய கோலங்கள் போடப்பட்டுள்ளது.

அமெரிக்கா அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைதொடர்ந்து அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் நாளை மறுநாள் பதவியேற்கவுள்ளார். இந்த தேர்தலில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்து வருகிறார். மேலும், ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிக்க நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம், கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. அப்பொழுது நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்கள், தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம், உலகையையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த வன்முறையில் 5 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, இதுதொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோரை அமெரிக்க புலனாய்வு போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தினார்கள். ஜோ பைடன் பதவியேற்பு விழாவின் போது நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவு பிரிவு எச்சரித்துள்ளதை தொடர்ந்து, நாடாளுமன்ற கட்டிடம் முழுவதுமே பாதுகாப்பு படையினரின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தின் முன், டைல்ஸ்களை பயன்படுத்தி கோலங்களை உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள், இந்த கோலங்களை உருவாக்கியதாகவும், பாதுகாப்பு காரணமாக அந்த கோலங்கள் அங்கு வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆயினும், பதவியேற்பு விழாவின் துவக்கத்தில் காணொலி காட்சி மூலமாக இந்த கோலங்கள் ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.