யாகங்கள் நடத்தினால் கொரோனாவின் மூன்றாம் அலை இந்தியாவை தீண்டாது – பாஜக அமைச்சர் உஷா தாக்கூர்!

மத்திய பிரதேச மாநிலத்தின் கலாச்சாரத்துறை அமைச்சர் உஷா தாக்கூர் அவர்கள் யாகங்கள் நடத்தினால் இந்தியாவை கொரோனா வைரஸின் மூன்றாம் அலை தீண்டவே தீண்டாது என கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கொரோனாவை ஒழிப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவின் இரண்டாம் அலையே இன்னும் ஓயாத நிலையில் அடுத்த கட்டமாக வரவுள்ள கொரோனாவின் மூன்று அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் இது அதிக அளவில் சிறுவர்களைத் தாக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால், பலரும் கொரோனாவின் 3ஆம் அலை குறித்து அஞ்சி வருகின்றனர்.

இதனையடுத்து தற்போது மத்திய பிரதேச மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 16 ஆயிரத்து 500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் புதிய கொரோனா மருத்துவமனை ஒன்றை திறந்து வைக்க மத்திய பிரதேச மாநிலத்தின் கலாச்சாரத்துறை அமைச்சர் உஷா தாக்கூர் அவர்கள் சென்றுள்ளார்.

அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சுற்றுச்சூழல் சுத்தம் அடைவதற்கு நான்கு நாட்களுக்கு யாகங்கள் நடத்துங்கள் எனவும், இது யாக்ஞ  சிகிச்சை எனவும், இதைத்தான் ஆதி காலங்களில் நமது மூதாதையர்கள் பெரும் தொற்றுக்களை ஒழிப்பதற்கான செய்தார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் யாகங்கள் நடத்தினால் கொரோனாவின் மூன்றாம் அலை நம் நாட்டை தீண்டவே தீண்டாது எனவும் தெரிவித்துள்ள அவர், கொரோனாவின் மூன்றாம் அலைக்கு  மத்திய பிரதேச அரசு முழு தயாரிப்பில் உள்ளதாகவும், நம் கொரோனாவை வெற்றிகரமாக வெல்லுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal