“இந்தியை மட்டும் முதன்மைப்படுத்தும் மோடி அரசின் போக்கு;அதனை இடித்துரைக்கும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு” – கே.பாலகிருஷ்ணன்…!

மாநில அரசு அனுப்பும் விண்ணப்பத்தில் உள்ள மொழிகளிலேயே மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ள தீர்ப்பை வரவேற்று மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழக எம்.பிக்களின் கடிதங்களுக்கு இந்தியில் மத்திய அமைச்சர்கள் பதில் அளிக்கிற சட்ட விரோதமான நடைமுறை நிறுத்தப்பட வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் அவர்கள் மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில்,”ஒரு மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அந்த மொழியில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்”, என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.

மேலும் இந்த வழக்கில்,”இந்திய அலுவல் மொழிச்சட்டத்தை மத்திய அரசு, அதன் அலுவலர்கள் பின்பற்ற வேண்டும்.செய்தியாக இருந்தாலும் விளக்கமாக இருந்தாலும் அதனை தாய்மொழியில் புரிந்துகொள்ளும் போதுதான் முழுமடைகிறது” என நீதிபதி கருத்து தெரிவித்தார்.

இதனையடுத்து,இந்த தீர்ப்பை வரவேற்று மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு எம்.பி கனிமொழி நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில்,உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ள தீர்ப்பை வரவேற்று மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

கல்வியின் முதன்மை நோக்கம் அறிவு வளர்ச்சியே ஆகும். பொருளாதார மேம்பாடு மட்டும் முதன்மையாக கொண்ட அணுகுமுறை மாற வேண்டும். சரியான நேரத்தில், வழக்குத் தொடுத்த மதுரை MP சு.வெங்கடேசன் அவர்கள் பாராட்டிற்கு உரியவர்.மத்திய அரசின் தவறான போக்கிற்கு ஆணியடிப்பது போல அமைந்துள்ளது நீதிமன்ற தீர்ப்பு.

தாய்மொழிகளை போற்றி வளர்ப்போம், உழைக்கும் மக்களின் இயல்பான மொழி உரிமைக் குரலுக்கு துணை நிற்போம். திணிப்பிற்கு எதிராக உரிமை முழங்குவோம்.

இந்தியை மட்டும் முதன்மைப்படுத்தும் மோடி அரசின் போக்கை இடித்துரைக்கும் விதமாக நேற்றைய உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பு அமைந்திருக்கிறது”,என்று தெரிவித்துள்ளார்.