போதைப்பொருள் ஒழிப்பு.! தமிழக அரசின் செயல்பாட்டிற்கு உயர்நீதிமன்றம் பாராட்டு.!

போதை பொருள்கள் ஒழிப்பில் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கிறது என மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டுகளை தெரிவித்துள்ளது.  

தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. இளைஞர்கள் மட்டுமல்லாமல், பள்ளிப்பருவ சிறார்கள் முதற்கொண்டு இந்த போதை பொருள்களுக்கு அடிமையாகி இருப்பதை நாள்தோறும் காணமுடிகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழக அரசின் உத்தரவின் பெயரில் ஆப்ரேசன் கஞ்சா எனும் பெயரில் தமிழக காவல்துறை தீவிர சோதனையில் களமிறங்கி பல்வேறு இடங்களில் நடமாடிய, நடமாட இருந்த போதை பொருட்களை அதிரடி சோதனையின் மூலம் கண்டறிந்து அவற்றின் நடமாட்டத்தை தடுத்துள்ளனர்.

இது குறித்து இன்று மதுரை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. நீதிமன்றம் குறிப்பிடுகையில், போதைப்பொருட்களை தமிழகத்தில் ஒழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது.  நீதிமன்றம் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் அரசு சார்பில் உரிய நடவடிக்கையும், சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. என குறிப்பிட்டுள்ளது.

அதே போல, கடந்த 3 மாதங்களில் 10,673 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதன்மூலம் தமிழகத்தில் மட்டும் 149.43 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை மீறி குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க எதுவாக சட்டத்தில் தேவையான திருத்தங்களை செய்யவும் அரசு உறுதி அளித்துள்ளது. என தனது பாராட்டுகளை மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் மூலம், தமிழக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கைகள் அடுத்தடுத்து முறையாக பின்பற்றப்படும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது எனவும் கூறியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment