#Breaking:கல்லூரி மாணவர் சந்தேக மரணம்;”உடலை மறுஉடற்கூராய்வு செய்க”- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

மதுரை:ராமநாதபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன்  உடலை மறுஉடற்கூராய்வு செய்வதற்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழிந்தல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மாணவர்,கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பரமக்குடி – கீழத்தூவல் சாலையில் கீழத்தூவல் காவல் நிலைய போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது,அவ்வழியாக பைக்கில் தன் நண்பருடன் வந்த மணிகண்டனை,போலீஸார் கையசைத்து நிறுத்தச் சொல்லியிருக்கின்றனர்.

ஆனால்,மணிகண்டன் தனது பைக்கை நிறுத்தாமல் வேகமாகச் சென்றதாகவும்,பின்னர் போலீஸார் மணிகண்டனைப் பின்தொடர்ந்து சென்று பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து,மணிகண்டனின் பைக், செல்போன் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும்,நடந்த சம்பவம் குறித்து மணிகண்டனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.காவல் நிலையத்துக்கு வந்த மாணவரின் பெற்றோர் மணிகண்டனை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால்,இரவு வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் மணிகண்டன் 3 முறை ரத்த வாந்தி எடுத்துள்ளார்.மேலும்,அவரது ஆண் உறுப்பில் வீக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து,அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட மணிகண்டனை மருத்துவர் பரிசோதனை செய்து விட்டு அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினார்.இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவரின் பெற்றோர், உறவினர்கள் அவர் போலீஸார் தாக்கியதால்தான் உயிரிழந்ததாக கூறி,உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து,காவல்துறையினர் தாக்கியதால்தான் தனது மகன்  உயிரிழந்ததாக கூறி மணிகண்டனின் தாயார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில்,இன்று இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, கல்லூரி மாணவர் மணிகண்டன் உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் மறுஉடற்கூராய்வு செய்வதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேசமயம்,மறுஉடற்கூராய்வு முடிந்தவுடன் உடலை பெற்றுக்கொள்வதாக தாயார் தரப்பில் உறுதி தரவேண்டும் என்றும் மேலும்,இந்த மறுஉடற்கூராய்வினை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், மருத்துவக்கல்லூரியிலிருந்து இடுகாட்டுக்கு செல்லும் வரை போலீசார் பாதுகாப்பு தரவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.