எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதுதான் திராவிட மாடல்.. தமிழக அரசு இதனை செய்ய வேண்டும் – டிடிவி

போராடும் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் பதிவு.

தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலை கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வரும் 9 ஆம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். இதையடுத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேசன் கடை ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய தமிழக அரசின் கூட்டுறவுத்துறை தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை வெளியிட்டிருந்த அறிவிப்பில், “NO Work No Pay” என்பதன் அடிப்படையில் சம்பளத்தை பிடித்தம் செய்ய மண்டல இணைப் பதிவாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டது. இந்த நிலையில், ரேசன் கடை ஊழியர்களின் கோரிக்கைக்கு செவி மடுத்திருக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பக்கத்தில், தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதுதான் திராவிட மாடல். அந்த ஆட்சியை நாங்கள் நடத்துகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் திமுக அரசு, இவர்களின் கோரிக்கைக்கு செவி மடுத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மாறாக, அவர்களை மேலும் வேதனைப்படுத்தும் வகையில், அவர்களின் போராட்டத்தை நசுக்கும் வகையிலும் வேலைநிறுத்த காலத்துக்கு சம்பளப் பிடித்தம் செய்ய உத்தரவிட்டிருக்கிறது இந்த அரசு. இந்த ஜனநாயக விரோத மனப்பான்மையை கைவிட்டு, போராடும் ஊழியர்களை அழைத்துப்பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment