“மத்திய அரசானது ஆமை வேகத்தில் செயல்படாமல்,முயல் வேகத்தில் செயல்பட்டு மக்களின் உயிரைக் காப்பற்ற வேண்டும்”- கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்..!

மத்திய அரசானது ஆமை வேகத்தில் செயல்படாமல்,முயல் வேகத்தில் செயல்பட்டு மக்களின் உயிரைக் காப்பற்ற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா  தீவிரமாக பரவி வரும் நிலையில்,அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.முதற்கட்டமாக,முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டது. இதனைத்தொடர்ந்து,மே 1 ஆம் தேதியிலிருந்து 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

இதற்கிடையில்,சில தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அதிக அளவில் கட்டணம் நிர்ணயித்து இலாபம் பெறுகின்றன.இதனால்,மத்திய அரசிடம் இருந்து போதுமான தடுப்பூசி மருந்துகள் மாநிலங்களுக்கு கிடைக்காத வண்ணம் உள்ளன.

இந்நிலையில்,தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இதுகுறித்து  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,”18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட ரூ.700 முதல் ரூ.1,500 வரையிலான கட்டணத்தை தனியார் மருத்துவமனைகள் நிர்ணயித்துள்ளன.இது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைவிட 6 மடங்கு அதிகமாக உள்ளது.

எனினும்,பெரும்பாலான நாடுகள் தங்கள் மக்களுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்குகின்றன.ஆனால்,இந்தியாவில் மட்டும் தனியார் நிறுவனங்கள் இலாபம் பெறும் நோக்கில் மத்திய அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.இதனால்,தடுப்பூசி மருந்துகளின் பற்றாக்குறை ஏற்பட்டு அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்படுகின்றன.

இந்தியாவில் மக்கள்தொகை மொத்தம் 138 கோடியாக உள்ளது.ஆனால்,இன்றைக்கு போடப்படும் தடுப்பூசிகளின் அளவு ஒரு நாளைக்கு 17 லட்சத்துக்கும் குறைவாகவே உள்ளது.இப்படியே நீடித்தால்  மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி முழுவதுமாக போட்டு முடிக்க 3 ஆண்டுகள் ஆகிவிடும்.

ஆனால்,பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எந்தவித வெளிப்படைத்தன்மையும் இன்றி அலட்சியமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.இந்நிலையில்,கொரோனாவின் பிடியில்  சிக்கி உயிருக்காக போராடும் மக்களை மத்திய அரசு காப்பாற்றுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

எனவே,மத்திய அரசானது ஆமை வேகத்தில் செயல்படாமல்,முயல் வேகத்தில் செயல்பட்டு மக்களின் உயிரைக் காப்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”,என்று கூறியிருந்தார்.