2021 ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை வெளியிட்ட பிசிசிஐ…!

2021ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.இந்திய கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ஏ + பிரிவு பட்டியலில் உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ,கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியலை  ஆண்டுதோறும் வெளியிடுவது வழக்கம்.அதன்படி, 2021ஆம் ஆண்டிற்கான வீரர்களின் ஒப்பந்த பட்டியலை தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ளது.அதன்படி,மொத்தம் 28 கிரிக்கெட் வீரர்களுக்கு நான்கு கிரேடு பிரிவுகளின்கீழ் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஒப்பந்த பட்டியலில் விராட் கோலி,ரோஹித் ஷர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய மூன்று பெரும் ‘A + ‘ கிரேடில் இடம் பெற்றுள்ளனர்.எனவே,இவர்களின் சம்பளத்தொகை வருடத்திற்கு ரூ.7 கோடி ஆகும்.

இவர்களை தொடர்ந்து,ரவிச்சந்திரன் அஸ்வின்,ரவீந்திர ஜடேஜா,ரஹானே மற்றும் புஹாரா ஆகியோர் A கிரேடில் இடம் பெற்றுள்ளனர்.இவர்கள் சம்பளத் தொகையாக ரூ.5 கோடியைப் பெறுகின்றனர்.

B கிரேடில், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ், புவனேஷர் குமார், மற்றும் ஷார்துல் தாக்கூர் மற்றும் தொடக்க பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால் ஆகியோர் உள்ளனர்.இவர்களின் சம்பளத் தொகை ரூ.3 கோடி ஆகும்.

ஒப்பந்த பட்டியலில் இருந்து மனிஷ் பாண்டே மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ள நிலையில், கிரேடு C யில் அக்ஸர் பட்டேல்,சுப்மன் கில்,முகமது சிராஜ் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.இவர்கள் சம்பளத்தொகையாக வருடத்திற்கு ரூ.1 கோடியைப் பெறுவார்கள்.