தமிழக அரசின் ஜனநாயகமற்ற போக்கு வருத்தம் அளிக்கிறது – அண்ணாமலை

கிருஷ்ணசாமியை கைது செய்யப்பட்டிருப்பதை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கின்றது என அண்ணாமலை ட்வீட்.

மின்கட்டண உயர்வு மற்றும் திமுக அரசைக் கண்டித்து விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே புதிய தமிழகம் கட்சி சார்பில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரையிலிருந்து கார் மூலம் அக்கட்சியின் நிறுவனர் தலைவர் கிருஷ்ணசாமி விருதுநகர் நோக்கி வந்துகொண்டிருந்தார். திருமங்கலம் டோல்கேட் அருகே வந்தபோது, போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக கிருஷ்ணசாமியின் வாகனத்தை தொடர்ந்து சுமார் 40 கார்கள் வந்துள்ளன. இதில், கிருஷ்ணசாமியின் வாகனத்தை தொடர்ந்து 4 வாகனங்கள் மட்டுமே செல்ல அமனுமதியளிக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்க வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் அவருடன் காரில் வந்த அக்கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கைது செய்யப்பட்ட தகவலறிந்த விருதுநகர் மாவட்ட அக்கட்சி நிர்வாகிகள், விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு திரண்டு டாக்டர் கிருஷ்ணசாமி கைதை கண்டித்தும், அவரை விடுதலை செய்யக்கோரியும் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிலையில், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், மின் கட்டண உயர்வை கண்டித்து முறையாக முன் அனுமதி பெற்று போராட்டம் நடத்திய புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கின்றது. புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தமிழக பாஜக சார்பாக எங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினோம். மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடும் கட்சிகளின் குரல்வளையை நசுக்கும் தமிழக அரசின் ஜனநாயகமற்ற போக்கு வருத்தம் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment