2024-25 தமிழக வேளாண் பட்ஜெட்… அரசின் முக்கிய அறிவிப்புகள்.!

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று 2024-2025ஆம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

அதனை தொடர்ந்து, இன்று தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2024-2025ம் ஆண்டுக்கான வேளாண் படஜெட் உரையை வாசித்து வருகிறார். இந்த வேளாண் பட்ஜெட் குறித்த தகவல்களை கீழே காணலாம்.

தமிழக வேளாண் பட்ஜெட்

  • பயிர் காப்பீடு குறித்த முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்திற்கு 206 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 1.85 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு, ரூ.118.77 கோடி ஒதுக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
  • தென் மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, கோடை கால மகசூல் இழப்புக்கு சேர்த்து நிவாரணமாக 208.20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 10 ஆயிரம் விவாசாயிகளுக்கு தலா ‘2 மண்புழு உரப்படுகைகள்’ ஏற்பாடு செய்து தர ரூ.6 கோடி ஒதுக்கீடு.
  • 2 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 2 லட்சம் ஏக்கர் பசுந்தாள் உரம் அமைக்க 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 2,482 கிராம ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகள் நிலத்தில் மணப்பரிசோதனை செய்ய ரூ.6.27 கோடி ஒதுக்கீடு.
  • தமிழகத்தில் உள்ள தரிசு நிலங்களில் ஆடா தொடா, நொச்சி போன்ற தாவர வகைகளை பயிரிட 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நிரந்தர மண் உரத்தொட்டிகள், உரப்படுக்கை ஆகியவற்றை அமைக்க 5 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.
  • வேளாண் மகசூல் அதிகரிக்க 2 லட்சம் விவசாயிகளுக்கு 5 லட்சம் லிட்டர் உயிர் உரங்கள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.7.5 கோடி ஒதுக்கீடு.
  • இயற்கை விவசாயத்திற்கு இடும்பொருள் தயாரிக்க 100 குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுக்களுக்கு 1 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.
  • வேப்பமர எண்ணிக்கையை அதிகரிக்க 10 லட்சம் வேப்பங்கன்றுகள் இலவசமாக வழங்கும் திட்டத்திற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு.
  • நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஜீவன் சம்பா ரக நெல்வகை 1000 ஏக்கரில் விதைக்க விதை விநியோகம் செய்யப்படும்.
  • சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க, தமிழக சிறுதானிய உற்பத்தி கழகத்திற்கு 65.3 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் 3.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேனி முனையம் அமைக்கப்படும். அதில் தேனி பரிசோதனை மையம், தேன் சேமிப்பு மையம் ஆகியவை அமைக்கப்படும்.
  • வேளாண் விளைபொருட்களை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து அதனை சந்தைப்படுத்த தமிழகத்தில் 100 உழவர் அங்காடிகள் அமைக்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
  • பயிர்பெருக்கு திட்டத்தின் கீழ், 4.75 லட்சம் ஏக்கர் விளைநில பரப்பில் மத்திய மாநில நிதி ஒதுக்கீட்டில் இருந்து 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 2024-25ஆம் ஆண்டில் கூடுதலாக 50 ஆயிரம் ஏக்கர் துவரை பயிர் சாகுபடி செய்ய 17.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • எண்ணெய் வித்துக்கள் விளைப்பரப்பை அதிகரிக்க செய்ய, தரிசு நிலங்களில் எண்ணெய் விதைக்க 45 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 15,810 மெட்ரிக் டன் பயிர் வகை மற்றும் விதைகள் 50 முதல் 60 சதவீத மானிய விலையில் விதைகள் வழங்க 35 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • 2024-2028 வரையில் 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் 2 சிறுதானிய மண்டலங்கள் உருவாக்க நடப்பாண்டில் செயல்படுத்த 65.3 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • வேளாண் சார்ந்து தொழில்தொடங்க விருப்பமுள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
  • விவசாயிகளை வருவாய் இழப்பிலிருந்து பாதுகாக்க பயிர்காப்பீடு திட்டத்திற்கு 1,775 கோடி கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தண்ணீர் குறைவாக தேவைப்படும் சிறுதானியம், எண்ணெய் வித்துக்கள் பயிர்களை மாற்று பயிராக பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில் ரூ.12 கோடி ஒதுக்கீடு.
  • 2024-2025ஆம் ஆண்டில் பருத்தி சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், 14.20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • விவசாய நிலங்களில் சூரிய மின்சக்தி தளங்கள் அமைக்க 2 கோடி ரூபாய் அளவில் மானியம் வழங்கப்படும்.
  • டெல்டா மாவட்டங்ளில் 2,235 கி.மீ தூரத்திற்கு வாய்க்கால் அமைக்க, தூர்வாரும் பணிகளுக்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • ஈரோடு, கள்ளக்குறிச்சி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் 8 மஞ்சள் வேகவைக்கும் ஆலைகளும், 5 மஞ்சள் மெருகூட்டும் ஆலைகளும் அமைக்க 2.12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சிறுகுறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், இயந்திரங்கள் வாங்குவதற்கு மானியம் அளிக்க 170 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் 10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் வாங்குவதற்கு 90 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 250 ஏக்கர் பரப்பளவில் பேரீட்சை சாகுபடி செய்ய ஏக்கருக்கு 12 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் எனவும் இதற்கு 30 லட்ச ரூபாய் ஒதுக்கீடு.
  • ஏற்றுமதிக்கு உகந்த வாழை பயிரிட 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • புதிய அரசு தோட்டக்கலை பண்ணைகள் பூங்காக்கள் அமைத்திட 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ஊட்டி ரோஜா பூங்காவில் புதிய ரக ரோஜாக்களை பயிரிட 5 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • ஒருங்கிணைந்த முந்திரி வளர்ச்சி திட்டத்திற்கு 3.36 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் உற்பத்தி திறனை மேம்படுத்தி 773.23 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தானியங்கி நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களில் நீர்பாசன வசதியை மேம்படுத்த மானியம் வழங்கப்படும். இதற்கு 27.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • ஏற்றுமதிக்கு உகந்த புதிய ரக மாம்பழங்களை பயிரிட மானியம் வழங்கப்படும். இதற்கு 27.48 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கரும்பு சாகுபடியை மேம்படுத்த 20.43 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ப்பட்டுள்ளது.
author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment