மதுரை ஜவுளிக்கடையில் பயங்கர தீவிபத்து! 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு!

மதுரை ஜவுளிக்கடையில் பயங்கர தீவிபத்தில், 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு. 

நேற்று  நள்ளிரவில், மதுரை தெற்கு மாசி வீதியில்  ஜவுளி கடையில், தீ விபத்து ஏற்பட்டது. சற்று நேரத்தில் தீ வேகமாக பரவியதால், அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது. இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தீடீரென எதிர்பாராதவிதமாக கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இதில், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 4 வீரர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இவர்களில் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி என்ற தீயணைப்பு வீரர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், 2 தீயணைப்பு வீரர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஜவுளிக்கடை மிகவும் பழமையான கடை என்றும், இதனால் தான் கட்டிடம் இடிந்து விழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகி  உள்ளது. இதுகுறித்து, காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.