டி20 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு;இந்தியா- பாகிஸ்தான் மோதல் தேதி இதோ!

டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐசிசி இன்று அறிவித்துள்ள நிலையில்,நடப்பு ஆண்டில் அக்டோபர் 23 ஆம் தேதி இந்தியாவுடன் பாகிஸ்தான் மோதவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2022 ஆம் ஆண்டுக்கான  டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணையை இன்று அறிவித்துள்ளது.அதன்படி, ஆஸ்திரேலியாவில் அக்.16 ஆம் தேதி முதல் நவ.13 ஆம் தேதி வரை 7 இடங்களில் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெறுகிறது.மெல்போர்ன்,சிட்னி,பிரிஸ்பேன், அடிலெய்டு,கீலாங்,ஹோபர்ட் மற்றும் பெர்த் என 7 இடங்களில் 16 சர்வதேச அணிகளுக்கிடையில் 45 போட்டிகள் நடைபெறுகிறது.

அந்த வகையில்,ஆஸ்திரேலியாவில் அக்.16 ஆம் தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பைக்கான முதல் தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை அணி நமீபியாவை எதிர்கொள்கிறது.அதன்படி

முதல் சுற்று:

குரூப் ஏ: இலங்கை, நமீபியா, இரண்டு தகுதிச் சுற்று

குரூப் பி: வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து, இரண்டு தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெறும்.இதனைதொடர்ந்து,முதல் சுற்று போட்டிகளில் வெற்றி பெரும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

இதற்கிடையில்,நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா,நியூசிலாந்து,இங்கிலாந்து, இந்தியா,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் நேரடியாக சூப்பர் 12  சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன.அதன்படி,

சூப்பர் 12 சுற்று:

குரூப் 1: ஆஸ்திரேலியா,ஆப்கானிஸ்தான்,இங்கிலாந்து,நியூசிலாந்து,

குழு 2: வங்கதேசம்,இந்தியா,பாகிஸ்தான்,தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் உள்ளன.

அதே சமயம்,இந்த ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் குரூப் 2 இல் உள்ள இந்திய அணி தனது டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.MCG மைதானத்தில் இரு ஆசிய அணிகள் மோதும் முதல் உலகக் கோப்பை போட்டி இதுவாகும்.இதனால்,கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்தியாவும் பாகிஸ்தானும் கடைசியாக 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடின என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியாவின் போட்டிகள்:

இந்தியா vs பாகிஸ்தான், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் – அக்டோபர் 23

இந்தியா vs குரூப் ஏ ரன்னர் அப், சிட்னி கிரிக்கெட் மைதானம் – அக்டோபர் 27

இந்தியா vs தென்னாப்பிரிக்கா, பெர்த் ஸ்டேடியம் – அக்டோபர் 30

இந்தியா vs வங்கதேசம், அடிலெய்டு ஓவல் – நவம்பர் 2 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இதனையடுத்து,சூப்பர் 12 சுற்றில் இரண்டு குரூப்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.அதன்பின்னர், அரையிறுதி போட்டிகள் வரும் நவம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.இதைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பைக்கான இறுதி போட்டி நவம்பர் 13 ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.