உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூகநீதி வரலாற்றில் மைல்கல் – ராமதாஸ்

அருந்ததியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில்  உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூகநீதி வரலாற்றில் மைல்கல் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தவருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பட்டியலினத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சமுதாயங்களுக்கு உண்மையான சமூகநீதி வழங்க வகை செய்யும் உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு சமூகநீதி வரலாற்றில் முக்கிய மைல்கல் ஆகும்.தமிழ்நாட்டில் அருந்ததியர் சமுதாயத்திற்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தான் முக்கியக் காரணம் ஆகும். அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை வலியுறுத்தி 1988-ஆம் ஆண்டிலேயே வன்னியர் சங்கமும் அருந்ததியர் சங்கமும் இணைந்து ஈரோட்டில் மிகப்பெரிய மாநாட்டை நடத்தியதுடன், அருந்ததியர் சமூகத்திற்கு கல்வி வேலைவாய்ப்புகளில் 6% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானமும் இயற்றப்பட்டது. அப்போது தொடங்கி கடைசியாக 2008-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி 13 அருந்ததியர் அமைப்புகளின் தலைவர்களுடன் திமுக தலைவரும், முதலமைச்சருமான கலைஞர் அவர்களை, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி சந்தித்து அருந்ததியர்களுக்கு 3% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்க வைத்தது வரை பாட்டாளி மக்கள் கட்சியின் பங்களிப்பு அளப்பரியது.
பட்டியலினம் என்பதே தனிப்பிரிவு தான். அந்த பிரிவுக்குள் உள் ஒதுக்கீடு வழங்க இயலாது என்று கூறி தான் அருந்ததியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. அதற்கு முன் ஈ.வி. சின்னையா வழக்கில் பட்டியலினத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்ததால் இந்த வழக்கு முக்கியத்தும் பெற்றிருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், எந்த ஒரு இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்றும், அதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு என்றும் கூறியிருக்கிறது. இது சமூகநீதியை காக்கும் தீர்ப்பாகும்.
தமிழ்நாடு உட்பட இந்தியாவின் எந்த மாநிலத்திலும் தற்போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு முழுமையானது அல்ல. ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சமுதாயங்கள் உள்ளன. அவை அனைத்தும் ஒரே மாதிரியான பிற்படுத்தப்பட்ட தன்மை கொண்டவை அல்ல. அதனால், அவற்றை ஒரே பிரிவில் வைத்திருக்க முடியாது. அவற்றில் மிகவும் பிற்படுத்தப்பட்ட தன்மை கொண்ட சமூகங்களை தனியாக பிரித்து உள் ஒதுக்கீடு வழங்க வேண்டியது அவசியம் ஆகும். பட்டியலினத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் தான் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 11 ஆண்டுகளில் கல்வி & வேலைவாய்ப்புகளில் முன்னேறியுள்ளனர். அதேபோல், மிக, மிக பின்தங்கிய நிலையில் உள்ள சமுதாயங்களும் உள் ஒதுக்கீட்டின் மூலம் முழுமையான சமூகநீதியைப் பெறுவதற்கு உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு பெரிதும் உதவும்.
அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது பற்றி விவாதிக்க 2008-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தில் சில கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் , பாட்டாளி மக்கள் கட்சி தான் உறுதியாக நின்று அருந்ததியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்தது. அருந்ததியருக்கு இட ஒதுக்கீடு வழங்க முக்கியக் கருவியாக இருந்த கட்சி என்ற வகையில் உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பை பாட்டாளி மக்கள் கட்சி பாராட்டுகிறது; போற்றுகிறது.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.