செந்தில் பாலாஜி ஜாமீன் மனு – அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

Senthil Balaji: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ்.

கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதன்பின் செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, இதற்கான நகலும் அவரிடம் வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி பல்வேறு முறை செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றமும், முதன்மை அமர்வு நீதிமன்றமும் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது. பின்னர் உச்சநீதிமன்றம் வரை சென்றும் ஜாமீன் கிடைக்கவில்லை. இதன்பின் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து, இதுதொடர்பான விசாரணையை ஏப்ரல் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

அதாவது, தனக்கு எதிரான வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிற்கு எதிராகவும், ஜாமீன் கோரியும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், செந்தில் பாலாஜிக்கு எதிரான பண மோசடி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கவும் சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்தது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்