தற்கொலையில் இந்தியாவில் முதலிடத்தில் இருக்கும் தமிழகத்தில் இத்தகைய நிகழ்வுகள் தடுக்கப்பட வேண்டும் – அன்புமணி

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் தாய், தந்தை, மகன் என மூவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அன்புமணி ராமதாஸ் ட்வீட்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் தாய், தந்தை, மகன் என மூவர் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து அன்புமணி ராம்தாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் தாய், தந்தை, மகன் என மூவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. திசம்பர் மாதத்தில் கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை செய்து கொள்வது இது மூன்றாவது நிகழ்வு ஆகும்.

கடன் தொல்லை காரணமாக தஞ்சாவூர் ரெட்டிப்பாளையத்தில் தொழிலதிபர் ஒருவர் மனைவி மகனுடனும், இராணிப்பேட்டை காவேரிப்பாக்கத்தில் பேராசிரியர் ஒருவர் மனைவி மகனுடனும் தற்கொலை செய்து கொண்ட சோகம் நடப்பு திசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நடந்தது. இவை தடுக்கப்பட வேண்டும்.

தீர்க்க முடியாத கடன் தொல்லையால் மன உளைச்சலும், அவமானமும் ஏற்படும் போது தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் ஏற்படுவது இயல்பானது தான். ஏற்கனவே தற்கொலையில் இந்தியாவில் முதலிடத்தில் இருக்கும் தமிழகத்தில் இத்தகைய நிகழ்வுகள் தடுக்கப்பட வேண்டும்.

கந்து வட்டி உள்ளிட்ட தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்களின் சிக்கலைக் கேட்டு தீர்வு வழங்க, ஒரு நிலையான சட்டப்பூர்வ அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு மனநல கலந்தாய்வு வழங்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும்!’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.