302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை படுதோல்வி.. தொடர் வெற்றியில் இந்தியா… !

By

இலங்கை அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 55 ரன்கள் எடுத்து 302 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

   
   

நடப்பு உலகக்கோப்பை தொடரின் 33-ஆவது லீக் போட்டியில் இந்திய அணியும்,  இலங்கை அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்  டாஸ் வென்று இலங்கை பந்து வீச முடிவு செய்தது. இந்தியஅணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மன் கில் களமிறங்கினர். ரோஹித் சர்மாவால் இலங்கைக்கு எதிராக பேட்டிங்கில் சிறப்பாக ஆட்டத்தை எதையும் காட்ட முடியவில்லை. ஹிட்மேன் தனது முதல் பந்தை பவுண்டரியுடன் தொடங்கினார். ஆனால் அடுத்த பந்திலேயே மதுஷங்க கிளீன் போல்ட் செய்து ரோஹித்தை  பெவிலியனுக்கு அனுப்பினார்.

பின்னர், கோலி விராட் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் ஜோடி சேர்த்தனர். இவர்களின் விக்கெட்டை பறிக்கமுடியாமல் இலங்கை அணி திணறியது. இருப்பினும் இருவரும் அடுத்தடுத்து தங்களது அரை சதங்களை பூர்த்தி செய்தனர். சிறப்பாக விளையாடி வந்த சுப்மான் கில் 92 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இந்த பார்ட்னர்ஷிப் 189 ரன்களை குவித்தனர்.

மறுபுறம் சிறப்பாக விளையாடிய கோலி அடுத்த 2 ஓவரில் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால், இருவரும் சதத்தை தவறவிட்டனர். இதற்கிடையில்  சிறப்பாக விளையாடி வந்த தொடக்க வீரர் சுப்மான் கில் 30-வது ஓவரில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டம் தொடங்கியது முதலே சிறப்பாக விளையாடி வந்தார். இதனால் ஷ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

 

கசுன் ராஜித் வீசிய 36-வது ஓவரின் நான்காவது பந்தில் 106 மீட்டருக்கு சிக்ஸர் அடித்து நடப்பு உலகக்கோப்பையில் அதிக தூரம் சிக்ஸர் அடித்த பட்டியலில் முதலிடத்தில் இருந்த மேக்ஸ்வெல்லை பின்தள்ளினார். இதற்கு முன் தரம்சாலாவில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த போட்டியில் 104 மீட்டர் சிக்ஸர் அடித்து அதிக தூரம் சிக்ஸர் அடித்த பட்டியலில் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் இருந்தார். அதிரடியாக விளையாடி வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 56 பந்துகளில் 82 எடுத்து விக்கெட்டை இழந்தார்.
இறுதியாக 50 ஓவரில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்களை குவித்தது. இலங்கை அணியில் தில்ஷான் மதுஷங்க 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 358 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக திமுத் கருணாரத்ன, பாத்தும் நிஸ்ஸங்க இருவரும் இறங்கினர். முதல் பந்திலே பும்ரா வீசிய பந்தில் எல்பிடபிள்யூவில் டக் அவுட் ஆனார். அடுத்து குசல் மெண்டிஸ் களமிறங்க 2-ஓவரின் 2 பந்தில் தொடக்க வீரர் திமுத் கருணாரத்ன சிராஜ் வீசிய பந்தில் எல்பிடபிள்யூவில் டக் அவுட் ஆனார்.

 

இருப்பினும் அடுத்து வந்த சதீர சமரவிக்ரம வந்த வேகத்தில் 4 பந்தில் ரன் எடுக்காமல் டக் அவுட் ஆனார். 10 பந்து விளையாடிய கேப்டன் குசல் மெண்டிஸ் 1 ரன் எடுத்து சிராஜ் வீசிய பந்தில் போல்ட் ஆனார். இதனால் இலங்கை அணி 4 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்தது. பின்னர் களத்தில் இறங்கிய  ஹரிதா அசலங்கா 1,  துஷான் ஹேமந்த 0, துஷ்மந்த சமீர 0 ரன் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதில் மத்தியில் இறங்கிய ஏஞ்சல் மேதியோஸ் மட்டும் 12 ரன்கள் எடுத்தார்.

இறுதியாக இலங்கை அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 55 ரன்கள் எடுத்து 302 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணியில் முகமது ஷமி 5விக்கெட்டையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டையும் , பும்ரா, ரவீந்திர ஜடேஜா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இந்திய அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் புள்ளி பட்டியலில் 14 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. இலங்கை அணி விளையாடிய 7 போட்டிகளில் 2 வெற்றியும், 5 தோல்வியை அடைந்து 4 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய  வீரர்கள் பட்டியலில் முகமது ஷமி முதலிடத்தில் உள்ளார். உலகக் கோப்பையில் முகமது ஷமி  45 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இவரை அடுத்து ஜாகீர் கான் – 44 விக்கெட்டையும் , ஜவகல் ஸ்ரீநாத் – 44 விக்கெட்டையும்  வீழ்த்தி அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.

 

 

 

 

Dinasuvadu Media @2023