தங்களுக்கு அனுப்பிய 10 லட்சம் கொரோனா தடுப்பூசிகளையும் திரும்பப் பெறுமாறு தென்னாப்பிரிக்கா கோரிக்கை!

சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பப்பட்ட 10 லட்சம் கொரோனா தடுப்பூசியையும் திரும்பப் பெறுமாறு தென் ஆப்பிரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்டு கொண்டிருக்கிறது. இந்தியாவில் கண்டறியப்பட்ட தடுப்பூசிகளாகிய கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு மட்டும் தற்போது அவசர கால அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள முன்கள பணியாளர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து வெளிநாடுகளுக்கும் இந்தியாவின் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசிகள் வினியோகிக்கப்பட்டு கொண்டும் இருக்கிறது. இதன்படி கடந்த பிப்ரவரி மாதம் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 10 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை தென்னாப்பிரிக்காவிற்கு இந்தியா அனுப்பியுள்ளது. ஏற்கனவே அஸ்டராஜெனகா நிறுவனத்தின் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தென்னாப்பிரிக்காவில் கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக இருப்பதாலும் புதிய கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதாலும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை தென்னாப்பிரிக்கா நிறுத்தியுள்ளது. மேலும், இந்தியாவில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பப்பட்ட 10 லட்சம் தடுப்பூசிகளையும் திரும்பப் பெறுமாறும் தென் ஆப்பிரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

author avatar
Rebekal