பேரதிர்ச்சி…தொடரும் நீட் மரணம்…வேலூரைச் சேர்ந்த செளந்தர்யா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

நீட் தேர்வு தோல்வி பயத்தால் வேலூரைச் சேர்ந்த செளந்தர்யா என்ற மாணவி தற்கொலை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ சேர்க்கைகான நீட் தேர்வு கடந்த 12 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகத்திலிருந்து 1.10 லட்சம் பேர் எழுதியிருந்தனர்.

இதற்கிடையில்,சேலம் மாவட்டம் கூழையூரைச் சேர்ந்த விவசாயி சிவக்குமாரின் இரண்டாவது மகன் தனுஷ் என்பவர் ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி அடையாத நிலையில்,இந்த முறை நீட் தேர்வை எதிர்கொள்ள அச்சப்பட்டு தேர்வு நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து,அரியலூர் சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி 12ஆம் வகுப்புத் தேர்வில் 600க்கு 562.28 மதிப்பெண்களைப் பெற்று,நீட் தேர்வு எழுதிய நிலையில்,தேர்வில் தோற்று விடுவோமோ? என்ற அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இவர்கள் இருவரது மரணத்திற்கு முதல்வர் உள்பட பிற அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர்.

மேலும், தமிழக சட்டப் பேரவையில்,நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில்,வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தில் கூலித் தொழிலாளர்களான திருநாவுக்கரசு மற்றும் ருக்மணி தம்பதியின் மகளான செளந்தர்யா என்ற 17 வயது மாணவி நீட் தேர்வு முடிவு தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.நீட் தேர்வு சரியாக எழுதவில்லை என்ற விரக்தியில் இன்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த சம்பவம் மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.