சோனியா, ராகுல் காந்தி தொடர்புடைய நிறுவனத்தின் ரூ.751 கோடி சொத்துக்கள் முடக்கம்! காரணம் என்ன?

காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் காந்தி தொடர்புடைய நிறுவனத்தின் 751 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நாளிதழ் தான் நேஷனல் ஹெரால்டு. 1937-ஆம் ஆண்டு அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL) என்னும் நிறுவனத்தைத் தொடங்கிய முன்னாள் பிரதமர் நேரு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை அதில் பங்குதாரர் ஆக்கினார்.

இந்நிறுவனம் எந்தவொரு குறிப்பிட்ட நபருக்கும் சொந்தமானது அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 1942-ஆம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் 3 ஆண்டுகளுக்குப் பின் நேஷனல் ஹெரால்டு நாளிதழ் மீண்டும் வெளியாகத் தொடங்கியது. இருப்பினும், நிதி நெருக்கடி காரணமாக 2008ல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பிரசுரம் நிறுத்தப்பட்டு, 2016-ம் ஆண்டு டிஜிட்டல் வடிவத்தில் மீண்டும் தொடங்கப்பட்டது.

மக்களுடன் முதல்வர்… சோதனை முறையில் திட்டத்தை தொடங்கியது தமிழக அரசு!

இதனிடையே, ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை மேம்படுத்த காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி வட்டியில்லா கடன் வழங்கியது. இந்த கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில், அதன் பதிப்பு நிறுவனமான ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்தை, சோனியா காந்தியையும், அவரது மகன் ராகுல் காந்தியையும் இயக்குனர்களாக கொண்ட ‘யங் இந்தியா’ நிறுவனம் கையகப்படுத்தியது.

இதன் மூலம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை ‘யங் இந்தியா’ நிறுவனம் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்டதாக கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடுத்து அது டெல்லி கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதில், சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

அதன்படி, இந்த வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்திருந்தது. இந்த நிலையில், ‘யங் இந்தியா’ நிறுவனத்துக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கில் ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், PMLA, 2002 இன் கீழ் விசாரிக்கப்பட்ட பணமோசடி வழக்கில் 751.9 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தற்காலிகமாகப் பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL) மோசடியாக பெறப்பட்ட வருமானத்தை வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

அமைச்சரவை ஒப்புதல்.! 4 நாள் போர் நிறுத்தம் – இஸ்ரேல் அறிவிப்பு.!

இதனால், அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமாக டெல்லி, மும்பை, லக்னோ உள்பட பல நகரங்களில் இருக்கும் ரூ.661.69 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும், யங் இந்தியன் (ஒய்ஐ) 90.21 ரூபாய் அளவிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்படுகிறது என மொத்தம் ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்தின் ஈக்விட்டி பங்குகளில் முதலீடு செய்ததன் மூலம் கிடைத்த ரூ.90.21 கோடி வருவாயும் ‘யங் இந்தியா’ வசம் இருப்பது விசாரணையில் தெரியவந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த விவகாரத்தில் 2019-ஆம் ஆண்டு நேஷனல் ஹெரால்டுக்கு சொந்தமான சுமார் 16 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. தற்போது நேஷனல் ஹெரால்டு தொடர்புடைய பண மோசடி வழக்கில் ரூ.752 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்