‘சேரி மொழி’ சர்ச்சை… குஷ்புவுக்கு வலுக்கும் கண்டனங்கள்! விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார்!

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளது. இதில், பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான நடிகை குஷ்புவும் களமிறங்கினார்.

ஆனால் தாம் பேசியதில் தவறில்லை என மன்சூர் அலி கான் முதலில் விளக்கம் தந்திருந்தார். இருப்பினும், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை குஷ்பூ கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பான எக்ஸ் பதிவு ஒன்றில், நடிகை குஷ்பு சேரி என குறிப்பிட்டிருந்தார். இதுதான் தற்போது பூகம்பமாக வெடித்துள்ளது.

சேரி மக்களிடம் ஓட்டு கேட்கும் போது மட்டும் இனித்ததா?- குஷ்புவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் எச்சரிக்கை!

இதுதொடர்பாக விளக்கமளித்த நடிகை குஷ்பு, சேரி என்றால் பிரெஞ்ச் மொழியில் அன்பு, இதனால் தான் அந்த சொல்லை சொல்லை பயன்படுத்தினேன் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே, சேரி என்பதும் சேரி மொழி என்பதும் பூர்வகுடி மக்கள் வாழ்விடத்தையும் மொழியையும் குறிப்பிடுவது. அப்படியானால், தமிழ் மண்ணின் பூர்வகுடி மக்களின் மொழியை சேரி மொழி என கொச்சைப்படுத்துவதா? இழிவுபடுத்துவதா? என இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

நடிகை குஷ்புவுக்கு எதிராக காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் களமிறங்கியுள்ளனர். ‘சேரி மொழி’ என கூறி பட்டியல் சமூக மக்களை அவமதிக்கும் வகையில் பேசிய நடிகை குஷ்பூவுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது. சேரி மொழி என்று பேசி பட்டியலின மக்களை நேரடியாக குஷ்பூ அவமதித்துள்ளார். பாஜகவினருக்கு உரித்தான சாதிய மனோபாவத்தை விஷமாக கக்கியிருக்கிறார்.

ஆளுநர் அடையாள பதவி மட்டுமே.. மக்கள் பிரதிநிதிகளுக்கே அதிகாரம்..உச்சநீதிமன்றம் தீர்ப்பு.! முதல்வர் வரவேற்பு..

சேரி மக்களிடம் ஓட்டு கேட்கும் போது மட்டும் இனித்ததா? மக்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்த பிறகும் கூட தன் தவறுக்கு மன்னிப்பு கேட்காமல், பூசி மொழுகும் வேலையை செய்ய தொடங்கியிருக்கிறார். யாரை ஏமாற்ற குஷ்பூ கபட நாடகமாடுகிறார்? சேரி மொழி என்று சொல்லி பட்டியலின மக்களை அவமானப்படுத்தும் அளவுக்கு குஷ்பூவுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது? குஷ்பூவின் தரக்குறைவான பேச்சால் பட்டியலின மக்கள் மனது புண்பட்டுப் போயிருக்கிறது.

தமது தவறை திருத்திக் கொண்டு அந்தப் பதிவை உடனடியாக குஷ்பூ நீக்க வேண்டும். அதோடு அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி துறையின் மாநில தலைவர் எம்.பி. ரஞ்சன்குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், ‘சேரி மொழி’ என்ற வார்த்தையை பதிவிட்டது தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜக பிரமுகருமான குஷ்பூ மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் அளித்துள்ளது.

தலித் மக்கள் பேசும் மொழியை வன்மம் கொண்ட மொழி, தீண்டத்தகாத மொழி என குஷ்பு இழிவுப்படுத்தி பேசியதால், நடிகை குஷ்பு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக நிர்வாகி கார்த்திக் புகார் அளித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்