இருக்கை விவகாரம்! சபாநாயகர் அப்பாவு விளக்கம்.. பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. அப்போது கேள்வி, பதில் நேரத்தில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அவர் பேசுகையில், துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் மரபை மாற்ற வேண்டாம். எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக, 10 முறை கடிதம் அளித்துள்ளோம்.

3 சட்டமன்ற உறுப்பினர்களை நீக்க சொன்னதையும் நீங்கள் செய்யவில்லை. அதாவது, ஓபிஎஸ் உள்ளிட்ட 3 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனைத்தொடர்ந்து, எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை தொடர்பாக பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக, சட்டம் விதி என்ன சொல்கிறதோ அதன் படி தான் நடக்கிறேன். நீங்கள் கொடுத்ததை மறுக்கவில்லை, இருக்கை விவகாரம் தொடர்பாக வீம்புக்காக நடக்கவில்லை, சட்டப்படி தான் நடக்கிறேன்.

சட்டமன்றத்திற்குள் இருக்கை குறித்து கேள்வி எழுப்ப உரிமை இல்லை. இருக்கைகள் ஒதுக்குவது எனது தனிப்பட்ட உரிமை என்றும் ஒருவர் எந்த சின்னத்தில் வென்று பேரவைக்குள் வருகிறாரோ அதே சின்னத்தில் தான் கடைசி வரை பார்ப்பேன் எனவும் இருக்கை ஒதுக்கீடு குறித்து 10 முறை கடிதம் அளித்துள்ளதாக இபிஎஸ் பேசியதற்கு சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்தார். எதிர்க்கட்சித் தலைவர் பேசி வரும்பொழுது ஓபிஎஸ் மற்றும் அவர் ஆதவாளர்கள் பேச முற்படுவதால் சட்டப்பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதனால் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக, பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன்பின், எதிர்க்கட்சியினரை வெளியே அனுப்பும்படி சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.  சபாநாயகர் உத்தரவை தொடர்ந்து எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு பதிலில் திருப்தி இல்லை என கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதனிடையே, எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை ஓபிஎஸ்க்கு பதில் ஆர்பி உதயகுமாருக்கு வழங்க அதிமுக கோரிக்கை வைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்