தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரவி சாஸ்திரி விலக இருப்பதாக தகவல்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரவி சாஸ்திரி விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் 59 வயது நிரம்பிய ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் முடிவடைய உள்ள நிலையில், டி20 உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரவி சாஸ்திரி விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 17-ம் தேதி தொடங்கி, நவம்பர் 14ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடர் முடிந்ததும், இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக செயல்படுபவர் 60 வயதுவரை மட்டுமே, அப்பதவியில் நீடிக்க முடியும். தற்போது ரவி சாஸ்திரிக்கு 59 வயதாகிவிட்டது. இதனால் அவர் பதவி நீட்டிப்பு செய்யப்பட்டாலும் ஒரு வருடம் மட்டுமே பயிற்சியாளராக இருப்பார். புதிய பயிற்சியாளரை நியமிக்கும் முடிவில்தான் பிசிசிஐ இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பையுடன் பயிற்சியாளர் பதவியிலிருந்து விடைபெற விரும்புகிறேன் என பிசிசிஐ நிர்வாகிகளிடம், ரவி சாஸ்தரி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. உலகக் கோப்பை முடிந்த பிறகு, பயிற்சியாளர் பதவிக்கான அறிவிப்பு வெளியிடப்படும். அப்போது, ராகுல் டிராவிட் விண்ணப்பிக்கும் பட்சத்தில், அவர்தான் புதிய பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்படுவார் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே, என்சிஏ தலைவர் பதவி வகித்து வந்த ராகுல் டிராவிடின் இரண்டு வருட ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், ராகுல் டிராவிட் மீண்டும் அப்பதவிக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் 2021 நவம்பரில் டி20 உலக கோப்பைக்கு பிறகு முடிவடையும் நிலையில், ராகுல் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு உயர்த்தப்படுவதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளன.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்