ரஜினி மீது வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு ! தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

2002 முதல் 2005 வரை வருமான வரியை முறையாக செலுத்தவில்லை என்று நடிகர் ரஜினிக்கு ரூ. 66,22,436 அபராதம்  வருமானவரித் துறை விதித்து நோட்டீஸ் அனுப்பிய நிலையில்,இது தொடர்பான வழக்கினை வாபஸ் பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  

வருமான வரியை முறையாக செலுத்தவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2002-2003 நிதி ஆண்டில் ரூ.6,20,235 ம்,2003-2004 ஆம் நிதி ஆண்டில் ரூ.5,56,326 ம் ,2004-2005 ஆம் நிதியாண்டில் ரூ.54,45,875 ம் அபராதம் விதித்தது வருமான வரித்துறை.மேலும் இது தொடர்பாக ரஜினிக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டது.இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் நோட்டீசை ரத்து செய்வதாக தெரிவித்தது.

இதை எதிர்த்து வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் ,கடந்த 2014 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது .இந்த வழக்கு நேற்று  சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் வினீத் கோத்தாரி,ஆர். சுரேஷ் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது வருமானவரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,ஒவ்வொரு ஆண்டிலும் ரூ.50 லட்சத்திற்கும் குறைவாக அபராத தொகை விதிக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு தொடர தேவை இல்லை என்ற நிலை இதற்கு முன்பு இருந்தது.ஆனால் மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த ஆண்டு பிறப்பித்த சுற்றறிக்கையில்,ஒவ்வொரு ஆண்டிலும்  ரூ.1 கோடி மற்றும் அதற்கும் குறைவாக அபாரத் தொகை விதிக்கப்பட்டு இருந்தால் அதை எதிர்த்து புதிதாக வழக்கு தொடர வேண்டியதில்லை .ஏற்கனவே இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் வாபஸ் பெற வேண்டும் என்று தெரிவித்ததாக கூறினார்.எனேவ இதன் அடிப்படையில் நீதிபதிகள் வழக்கை  திரும்பப்பெற அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.