மழை பாதிப்பு…”ஏக்கருக்கு ரூ.30,000;பாதிக்கப்பட்டவர்ளுக்கு ரூ.5,000″ – தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை!

தமிழகம்:மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.8,000 இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது,விவசாயிகள் இழப்பின் ஒரு பகுதியைக் கூட ஈடு செய்யாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மழையால் சேதமடைந்த நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மழை பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5,000 வீதம் நிதியுதவி அளிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“தமிழ்நாட்டில் அண்மையில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.8,000 இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. உழவர்களுக்கான உதவி வரவேற்கத்தக்கது என்றாலும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளுடன் ஒப்பிடும் போது தமிழக அரசு அறிவித்துள்ள நிதி உதவி உழவர்களுக்கு ஏற்பட்ட இழப்பின் ஒரு பகுதியைக் கூட ஈடு செய்யாது.
காவிரிப் பாசன மாவட்டங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 நாட்களாக பெய்த மழை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர் மழையால் பல லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன. காவிரி பாசன மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் குழுவும் சுமார் 68,000 ஹெக்டேர் பரப்பளவில், அதாவது 1.70 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் சேதமடைந்து இருப்பதாக தமிழக முதலமைச்சர் அவர்களிடம் அறிக்கை அளித்திருக்கிறது.
அதனடிப்படையில் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.8,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இது போதுமானதல்ல என்பது மட்டுமின்றி, இதற்காக அரசு விதித்திருக்கும் நிபந்தனைகளின்படி பெரும்பான்மையான உழவர்களுக்கு இழப்பீடு கிடைக்க வாய்ப்பில்லை. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து மழை நீரில் மூழ்கி சேதமுற்ற பயிர்களுக்கு மட்டும் தான் ஏக்கருக்கு ரூ.8000 இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பா பயிர்களைப் பொறுத்தவரை மழையில் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு எதுவும் வழங்கப்படாது என்றும், மறு நடவு செய்ய வசதியாக ஹெக்டேருக்கு ரூ.6,038, அதாவது ஏக்கருக்கு ரூ.2415 மதிப்புள்ள விதைகள், நுண்ணூட்டச் சத்து, உரங்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மழையில் மூழ்கி சேதமடைந்த சம்பா பயிர்களுக்கு இழப்பீடு கிடைக்காது என்பது ஒரு புறமிருக்க, குறுவை பயிர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு போதுமானது அல்ல. தமிழ்நாடு அரசின் ஆளுகையில் இயங்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கடந்த 2015-ஆம் ஆண்டு மேற்கொண்ட மதிப்பீட்டின் படி ஒரு ஹெக்டேரில் நெல் பயிர் சாகுபடி செய்ய ரூ.83,683 செலவாகும். அதாவது ஒரு ஏக்கருக்கு ரூ.33,474 செலவாகும். அதன்பின் கடந்த 6 ஆண்டுகளில் உரங்கள் உள்ளிட்ட இடு பொருட்களின் விலைகள் பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், சாகுபடி செலவு கணிசமாக அதிகரித்திருக்கிறது. ஒரு ஏக்கருக்கு ரூ.33,474 சாகுபடி செலவாகும் என அரசு நிறுவனமே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், ரூ.8,000 இழப்பீடு வழங்குவது எந்த வகையிலும் போதுமானதாகவும், நியாயமானதாகவும் இருக்காது.
அதேபோல், சேதமடைந்த சம்பா பயிர்களுக்கு பதிலாக புதிய நெற்பயிர்களை இதற்கு மேல் விதை விதைத்து, நாற்று அகற்றி, வயலில் நட்டு சாகுபடி செய்வது என்பது சாத்தியமானது அல்ல. குறுவை நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்யப்படவில்லை என்பதாலும், சம்பா பயிர் இளம்பருவத்தில் இருப்பதாலும் உழவர்களுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்க வாய்ப்பில்லை. இதை கருத்தில் கொண்டு தொடர்மழையால் சேதமடைந்த நெல்லுக்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.மழை – வெள்ள சேதங்கள் தமிழக விவசாயிகளுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளன.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த புதுக்குடியைச் சேர்ந்த இராமலிங்கம் என்ற விவசாயி, தமது வயலில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் மழை வெள்ளத்தில் சேதமடைந்ததை தாங்கிக் கொள்ள முடியாத அதிர்ச்சியில் உயிரிழந்திருக்கிறார். கிட்டத்தட்ட இதே அளவிலான அதிர்ச்சியில் தான் மற்ற உழவர்களும் இருக்கிறார்கள். அரசு வழங்கும் நியாயமான உதவி தான் அவர்களைக் காப்பாற்றும்.அதேபோல், தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளாண் தொழிலாளர்களுக்கும்,வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் இதுவரை எந்த உதவியும் அறிவிக்கப்படவில்லை.
எனவே, பாதிக்கப்பட்ட உழவர்களின் துயரைத் துடைக்கும் வகையில், சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். அதேபோல், வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு குறைந்தபட்சம் ரூ.5,000 வீதம் நிதியுதவி அளிக்க வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.