அதிர்ச்சி சம்பவம்..!கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியரை வேலைக்கு வர கட்டாயப்படுத்திய பிரபல வங்கி..!

ஜார்கண்ட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியானது,கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது ஊழியரை வேலைக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின்,போகாரோவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணிபுரியும் அரவிந்த் குமார் என்பவர்,கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.இதனால்,கொரோனா தொற்றிலிருந்து விரைவில் குணமடைந்து வீடு திரும்பினார்.

இருப்பினும்,அவர் நுரையீரல் பாதிப்பு காரணமாக வீட்டில் ஆக்ஸிஜன் உதவியுடன் இருந்து வருகிறார்.அதனால்,மெடிக்கல் லீவ் வேண்டுமென்று அரவிந்த் குமார் வங்கியில் தெரிவித்தார்.ஆனால்,வங்கி அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்து,பணிக்கு வருமாறு அழுத்தம் கொடுத்துள்ளார்கள்.

இதன்காரணமாக,அரவிந்த் குமார் தனது ராஜினாமா கடித்ததை சமர்ப்பித்தார்.எனினும்,வங்கி அதிகாரிகள் அதையும் நிராகரித்தனர். மேலும்,அவரது சம்பளத்தை குறைப்பதாகவும்  பயமுறுத்தியுள்ளனர்.

இதனால்,வேறு வழியில்லை என்பதால்,அரவிந்த் குமார் ஆக்ஸிஜன் உதவியுடன் கடந்த திங்களன்று பணிக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்நிலையில்,அரவிந்த் குமாருடன் வங்கிக்கு வந்த அவரது குடும்பத்தினர்,உடல்நிலை சரியில்லாத அவரால் வேலை செய்ய முடியாது.எனவே அவருக்கு மெடிக்கல் லீவ் வேண்டுமென்று  கெஞ்சியுள்ளனர்.இதனையடுத்து,வங்கி அதிகாரிகள் அரவிந்த் குமாருக்கு மெடிக்கல் லீவ் கொடுத்து,வீட்டிற்கு செல்லும்படி கேட்டுக்கொண்டனர்.

எனினும்,கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை வேலைக்கு வர வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் கட்டாயப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் இருப்பவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.