முதலமைச்சர் ஸ்டாலின் கருத்துக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை பதிலடி!

பல்கலைக்கழக வேந்தர்கள் பொறுப்பில் முதலமைச்சர் இருந்தால் முழுவதும் அரசியல் சாயம் பூசப்படும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்துக்கு பதில் தெரிவித்துள்ளார். அதாவது, ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் 2வது பட்டமளிப்பு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பாடகி பி.சுசீலா மற்றும் பி.எம்.சுந்தரம் ஆகிய இரண்டு இசை மேதைகளுக்கு முனைவர் பட்டம் வழங்கி கவுரவித்தார். இதன்பின் முதல்வர் ஸ்டாலின் கல்வி, பல்கலைக்கழக வேந்தர்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாற்றினார்.

அதில், குறிப்பாக இந்த பல்கலை வேந்தர் முதலமைச்சர் தான் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்தார்கள். இந்த முடிவை எடுத்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை மனதார பாராட்டுகிறேன். இந்த பல்கலைக்கழகத்துக்கு மாநிலத்தை ஆளும் முதலமைச்சர் தான் வேந்தராக இருக்கும் சிறப்பு உள்ளது. இப்படி முதலமைச்சர்களே வேந்தராக இருந்தால் தான் பல்கலை சிறப்பாக வளர முடியும். இல்லையென்றால் அது சிதைந்துவிடும் என பேசியிருந்தார்.

திமுக மேடையில் பேசுவது ஒன்று… செயல்பாட்டில் வேறொன்று – வானதி சீனிவாசன்

இந்த நிலையில், பல்கலைக்கழக வேந்தர்கள் பொறுப்பில் முதலமைச்சர் இருந்தால் முழுவதும் அரசியல் சாயம் பூசப்படும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது, முதல்வர்கள் வேந்தர்கள் ஆனால், மாவட்ட தலைவர்கள் துணைவேந்தர்கள் ஆவார்கள். இதனால் கல்லூரிகளில் ஊழல் நடைபெறும், அரசியல் சாயம் பூசப்படும்.

எனவே, நீதிமன்றங்களுக்கு செல்வதைவிட ஆளுநரோடு அமர்ந்து பேசுவதே மக்கள் நலனுக்கு நல்லது என முதல்வர் கருத்துக்கு பதில் கருத்து கூறியுள்ளார். அதாவது, ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் என டெல்லிவரை செல்வதைவிட ஆளுநருடன் அமர்ந்து பேசுவது மக்கள் நலனுக்கு சிறந்தது என தமிழக ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு குறித்து தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்