தமிழகபாடநூலில் புதுச்சேரி மாநில வரலாறுகளை இணைக்க வேண்டும்- தமிழக முதல்வருக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம்..!

தமிழகபாடநூலில் புதுச்சேரி மாநில வரலாறுகளை இணைக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.

புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி எழுதிய கடிதத்தில், மதிப்பிற்குரிய முக ஸ்டாலின் அவர்களுக்கு இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். புதுச்சேரி யூனியன் பிரதேசம், இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. என்றாலும், தமிழ்த் தேசிய இனத்தின் பண்பாட்டுக்கூறுகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டதாகப் புதுச்சேரி விளங்குகிறது.

கல்வியில், தமிழகத்தின் பாடத்திட்டத்தையே புதுச்சேரி பின்பற்றி வருகிறது. எனவே, தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தில் புதுச்சேரியின் வரலாற்றைச் சேர்க்க வேண்டும் என்பது புதுச்சேரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

பிரெஞ்சு ஆளுகையில் இருந்து மீண்ட புதுச்சேரியின் போராட்ட வரலாறு, தமிழகத்தின் போராட்ட வரலாற்றிலிருந்து வேறுபட்டது என்பதைத் தாங்கள் நன்கு அறிவீர்கள். தமிழ்நாடு பாட திட்டத்தில், புதுச்சேரியின் வரலாற்றையும் சேர்ப்பது புதுச்சேரியின் வரலாற்றைப் புதுச்சேரி மற்றும் தமிழக மாணவர்கள் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

எனவே, தமிழ்நாட்டுப் பாடத் திட்டத்தில், புதுச்சேரியின் வரலாற்றையும் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும், இதற்கான பாடத்திட்டங்களைத் தயாரிக்கவும் அதற்கான நூல்களை எழுதவும் தேவையான கல்வியாளர்களை புதுவை அரசின் கல்வித்துறை பரிந்துரை செய்யவும் அறிவுறுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

GO

author avatar
murugan