மிக்ஜாம் புயல்.! பொது போக்குவரத்து ரத்து… பொது தேர்வுகள் ரத்து… உதவி எண்கள் இதோ…

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) சென்னையை புரட்டி போட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பை விட மிக்ஜாம் புயல் பாதிப்பு அதிகம் என கூறப்படுகிறது. அந்த அளவுக்கு சென்னை புறநகர் மட்டுமல்லாது சென்னை மத்திய முக்கிய பகுதிகளிலும் மழைநீர் புகுந்தது.

மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்ய அரசு சார்பிலும்,  பல்வேறு தன்னார்வலர்களும், அரசியல் அமைப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர். தற்போது மிக்ஜாம் புயல் சென்னையை விட்டு விலகிய காரணத்தால் மழையின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது.

மிக்ஜாம் புயல் – 25 விரைவு ரயில்கள், புறநகர் ரயில் நாளை (04.12.2023) ரத்து..!

பொதுவிடுமுறை :

கனமழை பாதிப்பு காரணமாக நேற்று போல இன்றும் சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. ராணிப்பேட்டையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை இன்று முற்றிலும் நிறுத்தப்பட்டது. மாநகர பேருந்துகள் இயக்கப்படவில்லை. சென்னை மெட்ரோ மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான சேவைகள் :

சென்னையில் விமான சேவை இன்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  அருகம்பாக்கம் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தால் சென்னை பிரதான பேருந்து நிலையமான கோயம்பேட்டிற்கும், வடபழனிக்கும் இடையே கூட போக்குவரத்தை செயல்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. சென்னை மத்திய பகுதியை விட புறநகர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது .

பல்கலைக்கழக தேர்வுகள் :

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழக தேர்வுகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

உதவி எண்கள் : 

சென்னை மாநகராட்சி பகுதியில் முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்த உதவி எண் 1913 என்ற எண் வேலை செய்யாத காரணத்தால் 044-2519207, 044-2519208, 044-2519209 ஆகிய எண்ணிற்கு அழைக்கவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.