நாளை முதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு!

மத்திய அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிற்சங்க ஊழியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். வங்கி, மின்சாரத்துறை, எல்.ஐ.சி., துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஊழியர்கள் இதில் பங்கேற்கின்றனர். ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ, உள்ளிட்ட 12 தொழிற்சங்கத்தினர் சேப்பாக்கத்தில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதனிடையே, சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல வாரியம் முன்பாக, போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 22 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தங்கள் ஒப்புதல் இன்றி நிறைவேறிய 13-வது ஊதிய ஒப்பந்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளனர். இன்று மாலை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருவதால், அதைப் பொறுத்து போராட்டத்தைத் தொடர்வது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் பகுதியில் உள்ள தொழிலாளர் நல அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது. இதற்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர், தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக வந்தனர். அண்ணா சிலை அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அவர்கள் சுமார் அரை மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், அவ்வழியே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. பின் மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
source: dinasuvadu.com

Leave a Comment