சென்னையில் தயாரிப்பாளர் சங்க தேர்தல் தொடங்கியது .!

சென்னையில் இன்று காலை 8 மணி முதல் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சில பல காரணங்களால் முன்னணி தயாரிப்பாளர்கள் பலர் பிரிந்து தனியாக இயக்குனர் பாரதிராஜா தலைமையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என தொடங்கினார்கள் .இந்த நிலையில் தற்போது பல வழக்குகளுக்கும் , சர்ச்சைகளுக்கு பிறகு இன்று தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெற்று வருகிறது .

சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கப்பட்டுள்ள இந்த தேர்தலில் 1303 உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர் . நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் யாரும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்று வரும்  இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, தேனப்பன் பி.எல். ஆகியோர் போட்டியிடுகிறார்கள். மேலும் பி.எல்.தேனப்பன் சுயேட்சையாக தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

மேலும் துணைத் தலைவர் பதவிக்கு மதியழகன்,கதிரேசன், முருகன், சிங்காரவடிவேலன், சிவசக்தி பாண்டியன்,பி.டி.செல்வகுமார், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். அதை போன்று செயலாளர் பதவிக்கு கோட்டபாடி ராஜேஷ், டி.மன்னன், ஆர்.ராதாகிருஷ்ணன், என்.சுபாஷ் சந்திரபோஸ்,கலைப்புலி ஜி.சேகரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

பொருளாளர் பதவிக்கு கே.ராஜன், ஜே.சதீஷ்குமார்,சந்திரபிரகாஷ்.எஸ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். மேலும் ஜே.சதீஷ்குமார் சுயேட்சையாக பொருளாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். அதே போன்று செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 94 பேர் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் டி.ஆர் அணிக்கும் , தேனாண்டாள் முரளி அணிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (நவம்பர் 23ம் தேதி) காலையில் தொடங்கப்படவுள்ளது .

Leave a Comment