விவசாயிகளுக்கு குட்நியூஸ்…நேரடி வங்கிக்கணக்கில் – 10 வது தவணை தொகையை விடுவித்த பிரதமர் மோடி!

டெல்லி:பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான 10-வது தவணை உதவித்தொகையை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் விடுவித்துள்ளார்.

பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயக் குடும்பங்களுக்கு உதவித்தொகையாக ஒரு வருடத்திற்கு ரூ 6,000 வழங்கப்பட்டு வருகிறது.அதாவது,நான்கு மாதத்துக்கு ஒரு முறை ரூ.2,000 என ஒரு வருடத்தில் 3 தவணைகளாக வழங்கப்படுகிறது.இந்த உதவித்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில்,இத்திட்டத்தின் மூலம் விவசாயக் குடும்பங்களுக்கு இதுவரை ரூ.1.6 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.குறிப்பாக,இதுவரை 9 தவணை முறையில் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,புத்தாண்டின் முதல் நாளில் ‘பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி’ (PM-KISAN) திட்டத்தின் கீழ்,விவசாயிகளுக்கான 10-வது தவணை உதவித்தொகையை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தற்போது விடுவித்துள்ளார்.

இதன்மூலம்,10 கோடி விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.20,000 கோடி நிதி இன்று விடுவிக்கப்பட்டு நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில்,பிரதமருடன் மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உடனிருந்தார்.

இதனைத் தொடர்ந்து,சுமார் 351 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு (FPOs) ரூ.14 கோடிக்கும் அதிகமான பங்கு மானியத்தையும்(equity grant) பிரதமர் வெளியிட்டுள்ளார்.இதன் மூலம் 1.24 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.