#குடியரசுத் தலைவர் தேர்தல்:பாஜக சார்பில் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல்!

இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுவுள்ளது.

இந்நிலையில்,குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பாஜக சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு,குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்கிறார்.இதனால்,டெல்லி சென்றுள்ள அவர் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.அதே சமயம்,பிரதமர் மோடி,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் உட்பட அனைத்து தலைவர்களும் அவரது வேட்புமனு தாக்கல் நிகழ்வுக்கு வருவார்கள் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில்,குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே,ஆயுதமேந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) மூலம் முர்முவுக்கு 24 மணிநேரமும் Z+ வகைப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 64 வயதான முர்முவுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியை ஆயுதப்படையினர் கடந்த புதன்கிழமை முதல் எடுத்துக் கொண்டதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

யார் இவர்:

ஒடிசாவின் சந்தால் பழங்குடியின சமூகத்தில் பிறந்த திரௌபதி முர்மு 1997 இல் ராய்ரங்பூர் நகர் பஞ்சாயத்தில் ஒரு கவுன்சிலராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.மேலும் 2000 இல் ஒடிசா மாநில அரசாங்கத்தில் பாஜக அமைச்சராகவும் பின்னர் 2015 இல் ஜார்கண்ட் மாநில ஆளுநராகவும் பதவி வகித்தவர்.இதனால்,ஜார்கண்டின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையையும் திரௌபதி முர்மு பெற்றவர்.மேலும்,இந்திய மாநிலத்தில் முதல் பழங்குடியின பெண் ஆளுநராக நியமிக்கப்பட்டவர திரௌபதி முர்மு ஆவார்.மேலும்,முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியாவின் முதல் பழங்குடி குடியரசுத் தலைவர் மற்றும் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment