பொன்.ராதாகிருஷ்ணன் விரக்தியில் உள்ளார் – அமைச்சர் கடம்பூர் ராஜூ

தன்னை கண்டுகொள்வதில்லை என பொன்.ராதாகிருஷ்ணன் விரக்தியில் உள்ளார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே பரபரப்பாகியுள்ளது.கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் இப்போதே அதிகம் பேசப்பட்டு வருகின்றது.இதனிடையே பாஜக ,அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளது. அந்த வகையில் பாஜகவின் மூத்த தலைவரும் ,முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது.தமிழகத்தில் 2021 -ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சி அமையும் . இப்போது வைக்கப்பட்டுள்ள கூட்டணி பாராளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி, சட்டமன்றத்துக்கு கூட்டணி அமைக்கப்படும். அது அதிமுகவுடன் இருக்கலாம், திமுகவுடன் இருக்கலாம் ,இரண்டும் இல்லாமல் கூட இருக்கலாம்.இவரது கருத்து அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இது குறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறுகையில்,  இன்னும் ஆறு மாதங்களில் சட்டமன்றத்  தேர்தல்  நடைபெற உள்ளது. சட்டமன்றத்  தேர்தலில் அதிமுக -பாஜக கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். 2016 -ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக 90 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயித்தது என்றும் கூறினார்.

ஆனால் பொன் .ராதாகிருஷ்ணனின் கருத்துக்கு அதிமுகவினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் இது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், பாஜகவினரும், தொகுதி மக்களும் தன்னை கண்டுகொள்வதில்லை என பொன்.ராதாகிருஷ்ணன் விரக்தியில் உள்ளார். கூட்டணி குறித்து கட்சி மேலிடம் அல்லது கட்சித் தலைவர் தான் சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.