இனி பணி நேரத்தில் காவலர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது – காவல் ஆணையர் உத்தரவு!

இனி பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.மேலும்,ஏதேனும் அவசர காரணம் எனில்  முறையான அனுமதி பெற்று செல்போன் பயன்படுத்த வேண்டும் எனவும் கூறியிருந்தது. இது தொடர்பாக,உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறுகையில்:

தேவையின்றி செல்போனில் அரட்டை- எச்சரிக்கை:

“அலுவலக நேரத்தில் தேவையின்றி செல்போனில் அரட்டை அடிப்பதும், அதனை பயன்படுத்துவதும்,வீடியோ எடுப்பதும் நல்ல நடவடிக்கை அல்ல.அலுவலக நேரத்தில் செல்போன் பயன்பாடு தொடர்பாக தமிழக அரசு உரிய விதிகளை வகுக்க வேண்டும்”,என்று தெரிவித்தார்

முன்னதாக,பலமுறை எச்சரித்தும் பணியிடத்தில் உடன் பணிபுரிவோரை பணி நேரத்தில் வீடியோ எடுத்த அரசு ஊழியரை சஸ்பெண்ட் செய்ததற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இத்தகைய உத்தரவை பிறப்பித்தது.

நான்கு வாரங்களில் நிறைவேற்ற உத்தரவு:

மேலும்,அலுவலக பயன்பாட்டுக்கெனில் அதற்கென தனி செல்போன்  அரசு ஊழியர்கள் விதிப்படி அரசு அலுவலர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது, செல்போன் கேமராக்களை பயன்படுத்தி வீடியோ எடுப்பது தொடர்பாக வழிகாட்டுதல்களை பிறப்பித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும்,இந்த உத்தரவை நான்கு வாரங்களில் நிறைவேற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

பணி நேரத்தில் காவலர்கள்:

இந்நிலையில்,காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் இனி பணிநேரத்தில் செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மேலும்,உத்தரவை மீறி பணிநேரத்தில் செல்போன் பயன்படுத்தும் காவலர்கள் மீது அரசு ஊழியர் நடத்தை விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.