சுற்றுலா வந்தவர்களிடம் இருந்து ரூ.69,400 பறிமுதல்.. கதறி அழுத பஞ்சாபி பெண்!

Tourists: வடமாநிலத்தில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த குடும்பத்தினரிடம் 69,400 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. இதனால், தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு அதிக பணம் எடுத்து செல்பவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படுகிறது.

அந்தவகையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில், நீலகிரி மாவட்டம் குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கணவர், மனைவி மற்றும் அவர்களது குழந்தைகள் ஊட்டி செல்வதற்காக அந்த வழியே வாடகை கார் மூலம் வந்துள்ளனர்.

அந்த நேரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்த பறக்கும் படையினர், அந்த காரை நிறுத்தி அவர்களிடம் இருந்த 69,400 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பஞ்சாபி பெண் எங்களிடம் செலவுக்கு கூட பணம் இல்லை, தயவு செய்து பறிமுதல் செய்த பணத்தை திருப்பி கொடுங்கள் என கதறி அழுதார்.

அவர் கூறியதாவது, நாங்கள் பஞ்சாப் மாநிலத்தில் விமானம் மூலம் கோவை வந்தோம். அங்கிருந்து வாடகை கார் மூலம் ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறோம். எங்களுக்கு இவ்வளவு பணம் எடுத்து வரக்கூடாது என்று தெரியாது. எங்களது பணத்தை திரும்ப கொடுத்து விடுங்கள் என இந்தியில் கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

தேர்தல் காலங்களில் இதுபோன்ற பணத்தை எடுத்து வரக்கூடாது என்றும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் நாளைக்குள் கிடைத்துவிடும் எனவும் பறக்கும் படையினர் பஞ்சாப் குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர். மேலும், சுற்றுலா வரும் பொதுமக்களிடம் பணத்தை பறிமுதல் செய்யக்கூடாது என கோரிக்கையும் வைத்ததாக கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்