55 வயதிற்கு மேற்பட்டோரை தவிர்க்க வேண்டும் – முதல்வர் பழனிசாமி

முகக்கவசம், தனிநபர் இடைவெளியுடன் 100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை.

தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காணொலிக்காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இதனிடையே பொதுமுடக்கம் மே 3ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அப்போது, பேரூராட்சி, நகராட்சிக்குள் கொரோனா கட்டுக்குள் வந்தாலும், மாநகராட்சிக்குள் கட்டுக்குள் வரவில்லை என்றும் தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து கொரோனா பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்ய தேவையான நடவடிக்கைகளை ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும். இதன்பின் ரேசன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் தேதி மற்றும் நேரத்தை பொதுமக்களிடம் தெளிவாக சொல்ல வேண்டும் என கூறியுள்ளார். வேளாண் சார்ந்த தொழில்கள் மற்றும் விளைபொருட்கள் கொண்டு செல்வதை யாரும் தடுக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து முகக்கவசம், தனிநபர் இடைவெளியுடன் 100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் அதிக ஆட்கள் இருந்தால் 2 அல்லது 3 ஆக பிரித்து பணியை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். குறிப்பாக 100 நாள் வேலைத்திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்டவர்களை தவிர்த்து, அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு பணி தரலாம் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்