பெகாசஸ் விவகாரம்: என்.எஸ்.ஓ அலுவலகங்களை சோதனை செய்கிறது இஸ்ரேல் அரசு!

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரிகள் தங்கள் அலுவலகங்களை சோதனையிட்டதாக NSO செய்தித் தொடர்பாளர் தகவல்.

பெகாசஸ் எனப்படும் ரகசிய மென்பொருள், இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஒ எனும் இணையப் பாதுகாப்பு (சைபர் செக்யூரிட்டி) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. வங்கதேசம், மெக்சிகோ, சௌதி அரேபியா போன்ற பல நாடுகள், என்எஸ்ஒ நிறுவனத்திடம் இருந்து பெகாசஸ் மென்பொருளை வாங்கிப் பயன்படுத்துகின்றன.

பெகாசஸ் மென்பொருள் மூலம் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் உலகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது. இது பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோரை உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில் பெகாசஸ் ஸ்பைவேர் உலகெங்கிலும் உள்ள பல அரசாங்கங்களால், பொது நபர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள பயன்படுத்தப்பட்டதாக ஊடகங்கள் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து இஸ்ரேலிய அரசு அதிகாரிகள் என்எஸ்ஓ குழுமத்தின் அலுவலகங்களை சோதனை செய்துள்ளனர்.

இந்த சோதனையானது நேற்று நடைபெற்ற நிலையில், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரிகள் தங்கள் அலுவலகங்களை சோதனையிட்டதாக NSO செய்தித் தொடர்பாளர் இஸ்ரேலிய செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். NSO நிறுவனம் சம்பந்தப்பட்ட அலுவலகங்களை தொடர்ந்து சோதனை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

NSO (குழுமம்) நிறுவனம், இஸ்ரேலிய அரசு அதிகாரிகளுடன் முழு வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுகிறது என்றும் சமீபத்திய ஊடகத் தாக்குதல்களில் எங்களுக்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு எங்கள் நிறுவனம் மீண்டும் மீண்டும் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்த ஆய்வு அதனை நிரூபிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பெகாசஸ் ஸ்பைவேர் இந்தியாவில் 300 மொபைல் போன் எண்களை உளவு பார்த்ததாகவும், இதில், ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்களின் எண்கள் இடம்பெற்றதாகவும், மேலும், மத்திய அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணாவின் எண்களும் இருந்தாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த 19ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கும் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செயல்பட முடியாமல் முடங்கியுள்ளன. மேலும், ஜனநாயகத்திற்கு தேசத்துரோகத்தை மத்திய அரசு செய்துவிட்டது என்றும் குற்றசாட்டியுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்